#WomensT20WorldCup | மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை யாரெல்லாம் இலவசமாக காணலாம்?
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை 18 வயதிற்குட்பட்டவர்கள் இலவசமாக காணலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த தொடரில், பங்கேற்கும் இந்திய அணியில் ஹிர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி சர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ (விக்கெட் கீப்பர்), யாஷ்டிகா பாடியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா ஷோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பட்டீல், சஜனா சஜீவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரை காண வரும் 18 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் நுழைவுக்கட்டணம் இலவசம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி ஜியோஃப் ஆல்லாரிடிஸ் அறிவித்துள்ளார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நுழைவுக்கட்டணம் ரூ.115 இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.