மகளிர் உலகக் கோப்பை | வெற்றி யாருக்கு? இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
இந்த நிலையில், நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (அக்.30) நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இவ்விரு அணிகளும் ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 60 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
            