இன்று மாலைக்குள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வரவு வைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இன்று மாலைக்குள் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை வந்தடையும். இது உதவி தொகை அல்ல, உரிமை தொகை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 1.06 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15-ம் தேதி தொடங்கப்பட்டது. 2 மாதங்கள் அளிக்கப்பட்ட நிலையில், 3-வது மாதமாக நவம்பர் மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை காரணமாக, இந்த மாதம் உரிமைத் தொகை தற்போது வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஏற்கெனவே உள்ள பயனாளிகளுக்கு உரிமைத் தொகை அவரவர் வங்கிக் கணக்குகளில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களில் சுமார் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் மகளிர் உரிமைத் தொகை பெறுவோர் எண்ணிக்கை 1,13,84,300-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்ட திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அப்போது மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியான சிலருக்கு உதவித்தொகையை வழங்கி, முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தலுக்கு முன்பு மகளிர் உரிமை தொகை குறித்து அறிவித்த போது, இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது, திமுக ஆட்சிக்கே வராது என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வர வைத்தீர்கள். உங்களுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டவன் நான்.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொன்னால், சொன்னதை செய்வேன். செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கான மகளிர் உரிமை தொகை 1.6 கோடி மகளிருக்கு வழங்கப்பட்டது. இன்று மாலைக்குள் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை வந்தடையும். இது உதவி தொகை அல்ல, உரிமை தொகை. தேவையும், தகுதியும் உள்ள அனைத்து மகளிருக்கும் இந்த உரிமை தொகை சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மேல்முறையீடு கோரி விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது. அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டிசம்பர் மாதம் முதல் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும். இது ஊரு கூடி இழுத்த தேர், ஊருக்காக திராவிட மாடல் உருவாக்கிய தேர். இந்த திட்டம் இமாலய வெற்றி பெற உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள்.”
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.