பெண்கள் இடஒதுக்கீடு மசோதா எப்போது அமலாகும்? - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!
2024ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு, பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூட்பித்ரியில் ராணி அப்பாக்காவின் நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டு பேசிய நிர்மலா சீதாராமன், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்கு முக்கியம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் நம்புவதால், மகளிர் மசோதா நிறைவேறியது என்றார்.
போர்த்துகீசியர்களுக்கு எதிராக போராடிய 16 ஆம் நூற்றாண்டின் உல்லாலின் ராணி, ராணி அப்பாக்காவின் தைரியத்தையும், வீரத்தையும் பாராட்டிய சீதாராமன் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக போராடிய பல அறியப்படாத போராளிகளின் பங்களிப்பை ஆவணப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின் ஒரு பகுதியாக, அரசாங்கம் 14,500 கதைகள் கொண்ட டிஜிட்டல் மாவட்ட களஞ்சியத்தை தொகுத்துள்ளது. இது சுதந்திர போராட்டத்துடன் தொடர்புடைய இடங்களை சிறப்பித்துக் காட்டுகிறது. சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கு, அரசியல் நிர்ணய சபையில் பெண்கள், மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் பழங்குடியினத் தலைவர்கள் ஆகிய மூன்று புத்தகங்களை வெளியிட அமர் சித்ர கதாவுடன் மத்திய கலாச்சார அமைச்சகம் இணைந்துள்ளது என்றார்.