மகளிர் பிரீமியர் லீக் 2024 இன்று தொடக்கம் - முதல் போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் மோதல்!
மகளிர் பிரீமியர் கிரிக்கெட் லீக் 2024 கிரிக்கெட் தொடர் பெங்களூரில் இன்று தொடங்குகிறது.
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கின் 2வது தொடர் பெங்களூரில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், உ.பி. ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் 2 முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறும். தொடர்ந்து 2, 3வது இடங்களை பிடிக்கும் அணிகள், எலிமினேட்டர் சுற்றில் விளையாடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றில் களமிறங்கும்.
இன்று தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பாண்டு மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கீர்த்தனா பாலகிருஷ்ணன் மும்பை அணிக்காக விளையாடுவது குறிப்பிடத்தக்கது.