மகளிர் உரிமைத் தொகை மேல்முறையீடு செய்தவர்களுக்கு குட் நியூஸ்!
மகளிர் உரிமை தொகை கோரி மேல் முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களின் வங்கி கணக்கில் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் பணம் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களாக உரிமைத் தொகை வங்கி கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது 8 லட்சம் பேர் உரிமைத் தொகை பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
மேல்முறையீட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட உள்ளது. இதனிடையே வரும் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே வங்கி கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை செலுத்த கோரிக்கைகள் எழுந்தன. அதனை தொடர்ந்து நவம்பர் 10 ஆம் தேதி முதல் வங்கி கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.