மயானம் வரை சடலத்தை சுமந்து சென்ற பெண்கள்!
சேலம் மாவட்டம் உக்கம்பருத்திக்காடு கிராமத்தில் வழக்கத்திற்கு மாறாக இறந்தவரின் உடலை இறுதி ஊர்வலத்தில் பெண்கள் சுமந்து சென்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள கிராமம் உக்கம்பருத்திக்காடு. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள், தங்கள் குடும்ப நிகழ்வுகளில் சடங்கு, சம்பிரதாயங்களை தவிர்த்து பெரியார் கொள்கை வழியில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், இக்கிராமத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து இறந்தவர்களுக்கு செய்யும் இறுதிச் சடங்குகளை தவிர்த்து இவரது உடலை தகனம் செய்துள்ளனர்.
எப்பொழுதுமே இறுதி ஊர்வலத்தில் அனைத்து ஊர்களிலும் ஆண்களே பங்குபெறுவர். மேலும் மயானத்திற்கு பெண்களை அனுமதிக்கமாட்டார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இக்கிராமத்தில் செல்லமுத்துவின் உடலை பெண்கள் சுமந்து சென்றனர். பெண்கள் முன்னே செல்ல ஆண்கள் பின் சென்றுள்ளனர். பின் உடல் தகனம் செய்யும் இடத்தில் இறுதி மரியாதைகளை செலுத்தி உடலை வைத்து எரித்தனர்.
எந்த நிகழ்விலும் ஆண், பெண் என்ற பாலின பேதம் பார்க்கக்கூடாது என்ற பெரியார் கொள்கைப்படி, பெண்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பெண்களை ஊர்வலத்திற்கு தலைமை ஏற்க வைத்து, அவர்கள் பின்னால் ஆண்கள் சென்றதாக அந்த கிராமத்தினர் தெரிவித்தனர்.