கேரளாவில், சுகாதார ஆய்வாளர்கள் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய பெண்...
கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபாதையை மறித்து பெண் ஒருவர் டீக்கடை நடத்தியதை அதிகாரிகள் காலி செய்ய வந்த போது அவர்கள் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள செங்கன்னூர் நகராட்சிக்கு அருகில்
உள்ள சாலையில் நடைபாதையை மறித்து பெண் ஒருவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்த நடைபாதையிலிருந்த கடையை அகற்றுமாறு அதிகாரிகள் பல முறை தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த பெண் கடையை அகற்ற மறுத்துவிட்டதை தொடர்ந்து மாநகராட்சி ஹெல்த் இன்ஸ்பெக்டர் டி.நிஷா, நகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர் மற்றும் போலீசார் ஆகியோர் வந்து டீ கடையை அகற்ற முயன்றனர்.
அப்பொழுது கடை நடத்தி வந்த பெண்ணும், அவருக்கு உதவியாக இருந்த பெண்ணும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கடையை காலி செய்ய விடமாட்டேன் என வாக்குவாதம் செய்தனர். ஒருகட்டத்தில் கோபமடைந்த அந்த பெண் அங்கிருந்த கொதிக்கும் பாலை எடுத்து அதிகாரிகள் மீது ஊற்றினார். இதனால், ஹெல்த் இன்ஸ்பெக்டர் டி.நிஷா, நகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர் மற்றும் போலீசார் உட்பட ஆறு பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.