கடும் வறட்சி - மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வினோத வழிபாடு!
மழை வேண்டி கிராம மக்கள் இணைந்து கழுதைகளுக்கு அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க திருமணம் நடத்தி வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த அன்னூர் அருகே லக்கேபாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி இரண்டு கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பஞ்ச கல்யாணி திருமணம் விழாவை நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று அந்த கிராமத்தில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் இரண்டு
கழுதைகளுக்கு திருமணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்தை ஒட்டி லக்கேபாளையம் பகுதியை சேர்ந்த பெண் கழுதை மணமகளாகவும், பக்கத்து கிராமமான கோவில்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆண் கழுதை மணமகனாகவும் அலங்காரம் செய்யப்பட்டது.
மேலும், பெண் கழுதைக்கு புடவை கட்டி, வளையல், பாசி, அணிவித்து, உதட்டுச்சாயம் மற்றும் நெகச்சாயம் பூசி மணமகள் போல் அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல ஆண் கழுதைக்கு வேஷ்டி மற்றும் துண்டு அணிவிக்கப்பட்டு மணமகன் அலங்காரம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் அழைப்பு நடைபெற்றது. கோயிலில் பூஜை செய்யப்பட்ட பின்னர், மேளதாளம் முழங்க பெண் கழுதைக்கு தாலி அணிவிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் தலைப்பு வெளியானது!
கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம் எனவும்,
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்னர் கடுமையான வறட்சி நிலவிய போதும், கழுதைகளுக்கு
திருமணம் செய்து வைத்ததை தொடர்ந்து, மழை பெய்தாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
எளிமையான முறையில் திருமணத்தை நடத்தி இருப்பதாகவும், மனிதர்களுக்கு திருமணம்
செய்யும் முறைப்படி திருமணம் நடத்தி இருப்பதாகவும் கிராம மக்கள்
தெரிவித்தனர். இதை தொடர்ந்து மறுவீடு அழைப்பும் நடைபெற்றது. திருமணத்திற்கு
வந்தவர்கள் மொய்ப்பணம் கொடுத்து சென்றனர். திருமணம் வந்தவர்களுக்கு கம்பங்கூழ்
வழங்கப்பட்டது. இந்த திருமணத்தை தொடர்ந்து கட்டாயம் மழை வருமென்ற நம்பிக்கையில் கிராம மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.