'கூகுள் மேப்' உபயத்தால் படிக்கட்டு நடுவே சிக்கிய சொகுசு கார்... பல மணி நேரத்திற்குப் பின் மீட்கப்பட்ட பயணிகள்!
Google Map உதவியுடன் மலைப்பாதையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஆபத்தான படிக்கட்டு நடுவே சிக்கிய கர்நாடகா சுற்றுலா பயணிகளின் சொகுசு காரை, உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரத்துக்கு பிறகு மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லைப் பகுதியாக உள்ளது. இங்கிருந்து சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக உதகை போன்ற பிற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர். கடந்த ஜன. 25-ம் தேதி முதல் தொடர் விடுமுறையால் கடந்த மூன்று நாட்களாக அதிகளவிலான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்தனர்.
இந்நிலையில் கர்நாடக மாநில இளைஞர்கள் சிலர் ஒரு சொகுசு காரில் சுற்றுலா வந்தனர். சுற்றுலாவை முடித்துக் கொண்டு Google Map உதவியுடன் தனது சொந்த ஊருக்கு அவர்கள் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் அருகே வரும் போது Google Map காட்டிய சாலையில் சென்றுள்ளனர்.
இதனையறிந்த அந்த கார் ஓட்டுநர் சொகுசு காரை சாதுரியமாக படிக்கட்டுகளில் நிறுத்தியவாறு காரில் இருந்து இறங்கி ஊர்மக்கள் உதவியை நாடினார். உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் வந்த பிற சுற்றுலா பயணிகள் எல்லாம் இணைந்து படிக்கட்டுகளில் பாறை துண்டுகளை அடுக்கி வைத்து ஒரு வழியாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு வாகனத்தை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர்.
பிறகு நிம்மதி அடைந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனத்தில் சொந்த ஊருக்கு கிளம்பினர்.