Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் #DMK எம்.பி-க்கள் எழுப்பிய கேள்விகள் என்னென்ன?

09:56 PM Dec 09, 2024 IST | Web Editor
Advertisement

குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (டிச.9) நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், திமுக எம்.பி-க்கள் சில கேள்விகள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தமிழ்நாட்டிற்கான கல்விநிதியின் நிலை என்ன? நீலகிரி எம்.பி. ஆ. ராசா கேள்வி

சமக்ரா சிக்ஷா அபியான் மற்றும் PM SHRI திட்டங்களின்கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதியின் விவரங்களை வெளியிட வேண்டும் என திமுக. எம்.பி. ஆ. ராசா மக்களவையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டைபோல் புதிய கல்விக் கொள்கையை (NEP) ஏற்காத மாநிலங்களுக்கு நடப்பாண்டில் இந்தத் திட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்படவில்லை என்பது ஏற்புடையது அல்ல என்றும் கல்வித் துறை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வளர்ச்சி நலன் கருதி மத்திய அரசு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் என்ன? திமுக எம்.பி. டாக்டர். கனிமொழி சோமு கேள்வி

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் வெள்ள அபாய பகுதிகளில் வடிகால்கள் ஏற்படுத்தவும் மத்திய அரசு இதுவரையில் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் பற்றிய விவரங்கள் கேட்டு திமுக எம்.பி. டாக்டர். கனிமொழி என்விஎன் சோமு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் வடிகால் திட்டங்கள் குறித்த விவரங்களும் அதன் பயன்களின் விவரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களின் நிலை என்ன? திமுக எம்.பி. எம். எம். அப்துல்லா

சுயதொழில் மற்றும் வருமானம் ஈட்டுவதற்காக தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதிக் கழகம் (NMDFC) சிறுபான்மையினருக்கு வழங்கும் சலுகை நிதித் திட்டங்களின் விவரங்கள் மற்றும் கடந்த ஐந்தாண்டுகளில் வழங்கிய நிதியின் விவரங்களையும் வெளியிடுமாறு திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் பயன்பெற்றவர்களின் விவரங்கள் துறைவாரியாக மற்றும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளிலுள்ள சிறுபான்மையினருக்கு இத்திட்டம் சென்றடைவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனவும் அவர் கேட்டுள்ளார்.

மருந்து தொழில்துறை ஊழியர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்க!
மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் சேலம் திமுக எம்.பி. செல்வகணபதி

மருந்து தொழில்துறை ஊழியர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்வதை வலியுறுத்தி திமுக எம்.பி தயாநிதி மாறன் மற்றும் திமுக எம்.பி. செல்வகணபதி வெளியுட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதுமுள்ள மருத்துவ தொழில் சார்ந்த விற்பனை பிரதிநிதிகளின் வேலைநிலையை மேம்படுத்துவது குறித்து அரசு, மருந்து தொழில்துறை பிரதிநிதிகள், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அகில இந்திய விற்பனை ஊக்குவிப்பு ஊழியர்களின் கூட்டமைப்பு இடையேயான தொழில்துறை முத்தரப்பு குழுக் கூட்டம் 10.08.2017 அன்று நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் மருத்துவ சேவை மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்துதல் குறித்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளதா?

விற்பனை பிரதிநிதிகள் மற்றும் அது சார்ந்த அனைவரிடமும் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டதா? விற்பனை ஊக்குவிப்பு ஊழியர்களின் (நிபந்தனை சேவை) சட்டம் 1976, பிரிவு 12 இன் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்டபடி விற்பனை ஊழியர்களுக்கு எந்த விதிகளும் இல்லை என்பதும் உண்மையா? மருந்து நிறுவனங்கள் அதன் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதை பெரிய அளவில் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் அவர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து அதிகரிக்கும் விமானக் கட்டணம். நடவடிக்கை என்ன? திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி

கடந்த ஆறு காலாண்டுகளில் உள்நாட்டு விமான கட்டணம் 40%க்குமேல் அதிகரித்துள்ளதை குறித்து மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி. பி. வில்சன், மேலும் நாட்டிலுள்ள விமான போக்குவரத்து நிறுவனங்கள் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி விமான கட்டணத்தை அதிகரிக்கச் செய்கின்றனர். இதை ஒழுங்குபடுத்துவதற்கு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன?

அதிக விமான நிலையக் கட்டணங்கள் வசூலிப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிக்கை விடுத்துள்ளது. இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் தற்போதுள்ள விமான நிலையக் கட்டணங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்

கல்வியில் பின்தங்கியவை என கண்டறியப்பட்ட மாவட்டங்களின் நிலை என்ன?
பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி கேள்வி

கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்த கணக்கெடுப்பின்படி நாடு முழுவதும் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்கள் என கண்டறியப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை மற்றும் பெயர்களை வெளியிட வேண்டும் என திமுக எம்.பி. ஈஸ்வரசாமி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் இந்த மாவட்டங்களில் உள்ள SC மற்றும் ST மக்கள்தொகை சதவீதம், தமிழ்நாட்டில் SC/ST மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களை அரசு கண்டறிந்திருந்தால் அதன் விவரங்களை வெளியிட வேண்டும், அந்த பகுதிகளில் கல்வியை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள்/முயற்சிகளின் விவரங்கள், இந்த மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் சிறப்பு நிதி, உதவித்தொகை திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான திட்டங்கள் என்னென்ன என விவரங்களையும் அவர் கோரியுள்ளார்.

உணவு பதப்படுத்தும் தொழில்களை மேம்படுத்த கோரிக்கை வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த்

தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உணவுப் பதப்படுத்தும் தொழில்களை (FPI) மேம்படுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் மத்திய அரசு முன்மொழிந்துள்ள சிறப்புத் திட்டங்களின் விவரங்கள், உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு ஆதரவாக பழக் கூழ், சேமிப்பு மற்றும் பேக்கேஜ் தொழில்களை நிறுவுவதற்கு மத்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பயனுள்ள நடவடிக்கைகள் பற்றிய விவரங்களையும் வெளியிட வேண்டும் என அவர் கேட்டுள்ளார்"

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Next Article