Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் | இன்றைய கூட்டத்தில் திமுக எம்பிக்களின் கேள்விகளும், கண்டனங்களும்!

10:03 PM Dec 17, 2024 IST | Web Editor
Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இன்று திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.

Advertisement

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே திமுக எம்பிக்கள் மத்திய அரசிடம் பல கேள்விகளை முன்னிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களால் எழுப்பப்பட்ட கேள்விகள் என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் - மைனாரிட்டி பாஜக இந்த மசோதாவை சட்டமாக்க முடியாது!

    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை வலியுறுத்தும் அரசியலமைப்பு 129வது சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக பொருளாளரும் திமுக மக்களவை குழுத்தலைவருமான டி. ஆர். பாலு எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசியதாவது:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதுபோல ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சிக்கு எதிரானது. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இம்மசோதாவை நான் ஆதரிக்க முடியாது. மத்திய பாஜக அரசிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த மசோதாவை எப்படி சட்டமாக்க முடியும்?

    தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வதற்காகவே வாக்காளர்கள் ஒரு அரசை தேர்தெடுக்கிறார்கள். அது வாக்காளர்களின் அடிப்படை உரிமை. ஒரே தேர்தல் முறை மூலமாக அவ்வுரிமையை இந்த மசோதா பறிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில், தேர்தல் நடத்த ஒவ்வொரு முறையும் 13981 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும். மேலும் 9284 கோடி ரூபாய் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க மட்டுமே செலவு செய்ய வேண்டும். இது தேவையில்லாதது.

    நாடு முழுவதும் அனைத்து கட்சிகளின் கருத்து ஒற்றுமையுடன், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் 79வது அறிக்கை முடிவு செய்திருக்கிறது என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இந்த மசோதாவை முதலில் விவாதித்துவிட்டு மீண்டும் அவையில் விவாதத்திற்கு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

    மண்வளத்தை காக்க நடவடிக்கை என்ன? திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. இராசா கேள்வி!

      பல்வேறு காரணங்களால் நாட்டில் 30% விவசாய நிலங்களின் வளம் பாதித்திருக்கிறது என்றும், அதை தடுப்பது மற்றும் சீர்செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா மக்களவையில் தெரிவித்துள்ளார்.

      மேலும் சீரான உரங்களைப் பயன்படுத்துதல், இயற்கை வேளாண்மை மற்றும் முறையான மண் மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் சீரழிந்து வரும் மண்வளத்தை மீட்டெடுக்க முடியும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

      கைக்கொடுத்ததா கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி? கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. மலையரசன் கேள்வி!

        கடந்த மூன்றாண்டுகளில் ஏற்றுமதி செய்யப்பட்ட கடல்சார் பொருட்களின் அளவு மற்றும் மதிப்பு எவ்வளவு என கள்ளக்குறிச்சி திமுக மக்களவை உறுப்பினர் மலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

        இந்தியாவிலிருந்து அதிக அளவில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள் யாவை, புதிய சந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனவா, புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட ஏற்றுமதி இலக்குகள் என்ன, கடல்சார் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், இந்திய கடல்சார் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், கடல்சார் பொருட்களின் பதப்படுத்தும் திறன் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் என்ன? கடல்சார் பொருட்கள் சர்வதேச ஏற்றுமதி தரநிலைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என அனைத்து விவரங்களையும் வெளியிடுமாறு மலையரசன் எம்பி கேட்டுள்ளார்.

        தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி ஆகிறதா தூத்துக்குடி? திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி கேள்வி!

          தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு திட்டத்தை (NICDP) செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் குறித்து மக்களவையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

          இத்திட்டத்தின்கீழ் நகரங்களை தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி ஆக்குவதற்காக தேர்வு செய்யும் அளவுகோல்கள் யாவை என்றும், தூத்துக்குடி இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வழிவகை செய்யவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

          பயனளிக்கிறதா கிராமப்புற திறன் பயிற்சி திட்டம்? திருவண்ணாமலை எம்.பி சி. என். அண்ணாதுரை கேள்வி!

            தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின்(DDU-GKY) கீழ் பயிற்சி பெற்று பணியில் அமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை துறைவாரியாக வெளியிடுமாறு திருவண்ணாமலை தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் சி.என். அண்ணாதுரை கோரியுள்ளார். இத்திட்டத்தின்கீழ் பணியமர்த்தப்பட்ட நிரந்தர பணியாளர்கள் எத்தனை பேர் மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ள பெண்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை விவரங்கள் ஆகிவற்றையும் வெளியிடுமாறு அவர் கேட்டுள்ளார்.

            பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை என்ன? வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கேள்வி!

              கடந்த ஐந்து ஆண்டுகளில் தென்னிந்தியாவில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாக்க, மத்திய அரசு ஒதுக்கீடு செய்த/செலவிடப்பட்ட நிதி குறித்து நாடாளுமன்றத்தில் திமுகவின் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

              தென்னிந்தியாவில் உள்ள புராதன நினைவுச் சின்னங்களைப் போற்றிப் பாதுகாக்க, மத்திய அரசு போதுமான நிதியை வழங்குகிறதா? அப்படியானால் கடந்த ஐந்தாண்டுகளில் பல்லவர்கள், சோழர்கள், இடைக்காலப் பாண்டியர்கள், சேரர்கள், நாயக்கர் வம்சத்தினர் காலத்து பழங்கால கோயில்களின் புராதன நினைவுச்சின்னம் மற்றும் வம்ச வாரியான விவரங்கள் யாவை?

              இந்தப் புராதனமான பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் கோயில்களின் டிஜிட்டல் மேப்பிங்கிற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் யாவை? சமீபகால அறிவியல் தொழில் நுட்பமான டிஜிட்டல் தொழில் நுட்பங்களை புகுத்திட, பயன்பாடு மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஏதேனும் நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்திருக்கிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

              Tags :
              DMKparliamentWinter Session
              Advertisement
              Next Article