“க்வாட் மாநாட்டை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த விருப்பம்” - #PMOIndia நரேந்திர மோடி!
க்வாட் மாநாட்டை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த விரும்புவதாகவும், சர்வதேச விதிகளை மதித்து அனைத்து பிரச்னைகளிலும் அமைதியான தீர்வுகளுக்கு ஆதரவு தருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து நேற்று (செப். 21) காலை விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். அமெரிக்கா சென்றடைந்த அவருக்கு அங்குள்ள இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து டெல்வர் மாகாணத்தின் வில்மிங்டனில் அமெரிக்க அதிபர் பைடன் நீண்ட நாட்களாக வசித்து வரும் இல்லத்தில் அவரை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியை அதிபர் ஜோ பைடன் வரவேற்றார். இருநாட்டு தலைவர்களும் சீனா மற்றும் ரஷ்யா குறித்து இந்த சந்திப்பின் போது பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல உக்ரைன் – ரஷ்யா போர் குறித்து பேசவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து, க்வாட் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது,
“பதற்றமும் பல்வேறு விதமான பிரச்னைகளும் உலகை சூழ்ந்திருக்கும் நேரத்தில் க்வாட் உச்சி மாநாடு நடக்கிறது. ஜனநாயக அடிப்படையில் க்வாட் உறுப்பு நாடுகள் செயல்படுவதில் மகிழ்ச்சி. இந்தோ - பசுபிக் பெருங்கடல் உள்ளடக்கிய பகுதிகளில் க்வாட் உறுப்பு நாடுகள் சுதந்திரமாக செயல்பட வேண்டியது முக்கியம். பயங்கரவாத செயல்களுக்கு எதிராக க்வாட் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். க்வாட் மாநாட்டை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த விரும்புகிறோம். சர்வதேச விதிகளை மதித்து அனைத்து பிரச்னைகளிலும் அமைதியான தீர்வுகளுக்கு ஆதரவு தருகிறோம்” என மோடி குறிப்பிட்டார்.
மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.