மீண்டும் காமெடி கதாபாத்திரங்களை ஏற்பீர்களா?... சூரி கொடுத்த நச் பதில்!
திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் நடிகர் சூரி நடிப்பில் வெளியாக உள்ள மாமன் திரைப்பட டிரைலர் திரையிடப்பட்டது. இதனை ரசிகர்கள் உடன் இணைந்து நடிகர் சூரி கண்டு களித்தார். அப்போது ரசிகர்களிடம் பேசிய நடிகர் சூரி திருப்பூரில் 14 வயதில் வேலைக்கு வந்துள்ளேன். பல்லடம் சாலையில் உள்ள பனியன் துணி சீரமைக்கும் ஆலையில் பணியாற்றியதாக தெரிவித்தார்.
தற்பொழுது இதே ஊருக்கு கதா நாயகனாக வந்துள்ளேன் என பெருமையுடன் தெரிவித்தார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் காமெடி சூப்பர் ஸ்டார் என கோஷமிட்டனர். அதற்கு பேசிய நடிகர் சூரி, திருப்பி இழுத்துட்டு போயிட்டாரு என நகைச்சுவையாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாமன் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில், குடும்ப உறவு சார்ந்த ஒவ்வொரு வீட்டில் நடக்கும் சம்பவங்கள் போலத்தான் இருக்கும். இந்தப் படத்தில் நான் கதையின் நாயகனாக தெரிய மாட்டேன். உங்களில் ஒருவனாகதான் தெரிவேன். கதை நாயகன்போல ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் இருப்பார்கள். இந்த படத்தை பார்த்து அதன் மூலம் பயனடைந்தவர்கள் எங்களை அழைத்தால் நிச்சயம் அவர்கள் வீட்டிற்கு செல்வோம் என தெரிவித்தார்.
கதாநாயகனாக நடிக்க துவங்கிய பிறகு மீண்டும் காமெடி கதாபாத்திரங்கள் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, கதை நாயகனாக சென்று கொட்டுள்ளேன். நல்ல வாய்ப்பு அமைந்தால் யோசிக்காமல் செல்வேன். அதே நேரத்தில் எனது தயாரிப்பாளர்களையும் நான் யோசிக்க வேண்டும். என்னை வைத்து கோடிக்கணக்கில் பணம் செலவழித்து படம் எடுக்கிறார்கள். நான் எனக்கு பணம் கிடைக்கிறது என செல்ல முடியாது. நல்ல கதை அம்சம் கிடைத்தால் நடிப்பேன்.
இந்தியா தான் யார் என்பதை காட்டியுள்ளது. போர் என்பது ஜீரணிக்க முடியாதது. எல்லோரையும் பாதிக்கும் போர் நிறுத்தம் வரவேற்கத்தக்க ஒன்று; அனைவருக்கும் நல்லது என தெரிவித்தார். இந்த படத்தின் கதை நான் யோசித்து வைத்திருந்தது. அனைவருக்கும் பிடித்ததால் தான் எடுத்தார்கள். அடுத்து என்ன என்பது குறித்து யோசிக்கவில்லை. நான் முதலில் தயாரிப்பாளருக்கு நல்ல நடிகனாக திரையரங்கிற்கு வரும் ரசிகர்களுக்கு நல்ல நடிகனாக இருக்க விரும்புகிறேன் என தெரிவித்தார்.