வெள்ளிப் பதக்கத்தை பெறுவாரா வினேஷ் போகத்? - இன்று தீர்ப்பு!
வினேஷ் போகத் வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
பாரீஸ் நகரில் கடந்த 26-ஆம் தேதி தொடங்கிய 33-வது ஒலிம்பிக் போட்டி, 17 நாள்கள் நடைபெற்ற நிலையில் நேற்று இரவு நிறைவடைந்தது. முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக்கில் நடைபெற்ற பெண்கள் மல்யுத்தத்தின் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் கலந்து கொண்டார். தனது அபார திறமையால் அடுத்தடுத்து வெற்றிபெற்ற அவர், இறுதிப் போட்டி வரை முன்னேறினார். தங்கப் பதக்கத்துக்காக காத்திருந்த அவர், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.இதையடுத்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார்.
எடை அதிகரிப்புக்கு என்ன காரணம்?
வினேஷ் போகத் ஒரே நாளில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடியது, ஒலிம்பிக் வீரர்களின் கிராமத்திற்கும் போட்டி அரங்கிற்கும் இடையே உள்ள தூரம் ஆகியவையே எடை அதிகரிக்கக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டது. அதாவது மல்யுத்தப் போட்டி நடைபெறும் இடமான சாம்ப் டி மார்ஸ் அரீனாவிற்கும், ஒலிம்பிக் கிராமத்திற்கும் இடையே அதிக தூரம் இருந்ததாகவும் இதுவே எடையைத் திட்டமிட்டது போலக் குறைக்க முடியவில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
"ஒரே நாளில் அடுத்தடுத்த போட்டிகளில் வினேஷ் போகத் கலந்து கொண்ட நிலையில், மறுநாள் அவரது எடை 3 கிலோ அதிகரித்தது. வினேஷ் போகத் தனது எடையை குறைக்க இரவு முழுவதும் உறங்காமல் ஜாகிங் மற்றும் ஸ்கிப்பிங் செய்தார். மேலும் வினேஷ் போகத்தின் முடியை வெட்டி, உடலில் இருந்து இரத்தம் எடுக்கும் அளவிற்கு கூட சென்றனர். இரண்டாவது நாள் காலையில் வினேஷின் எடை 100 கிராம் அதிகரித்து இருந்த நிலையில், அதனால் வினேஷுக்கு எந்தவொரு லாபமும் இல்லை. 100 கிராம் எடை அதிகமாக இருப்பது என்பது மிகவும் குறைவு. இது வீரர்களின் எடையில் 0.1 முதல் 0.2 சதவீதம்வரை மட்டுமே. கோடைக்காலத்தின்போது மனித உடல் வீங்குவது எளிதாக ஏற்படலாம்.
வாதங்கள் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் அவர் வெள்ளிப்பதக்கம் பெற வேண்டும் என நாடே எதிர்பார்த்துள்ளது.