பொங்கலுக்கு வெளியாகிறதா விக்ரமின் #DhruvaNatchathiram?
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரீத்துவர்மா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு 2017-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தப்பட்டிருந்தது.
படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பல காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிப்போனது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாகவுள்ள நிலையில் துருவ நட்சத்திரமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.