குஷி 2 உருவாகுமா? - எஸ்.ஜே.சூர்யாவின் புதிய அப்டேட்!
சமீபமாக பல்வேறு பழைய படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வெற்றி அடைந்து வருகிறது. அந்த வரிசையில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்த திரைப்படம் குஷி. இந்த படம் 25 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் 25ம் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளார். அப்போது,
"குஷி கதையை நான் விஜய்சாரிடம் சொன்னபோது அவர் பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை. அவருக்கு கதைபிடிக்கவில்லை என்று நினைத்து, வேறு கதை சொல்லட்டுமா என்றேன். இது நல்லா இருக்கு, இதையே பண்ணலாம் என்றார். அதை கூட இவ்வளவு சிம்பிளாக சொல்கிறாரே என நினைத்தேன். குஷி படத்தின் கருவும், கதை சொன்ன விதமும் வித்தியாசமானது. கொல்கத்தாவில் பிறந்த ஹீரோவும், குற்றாலம் அருகே பிறந்த ஹீரோயினும் எப்படி சேருகிறார்கள் என்ற விஷயத்தை படத்தின் தொடக்கத்திலேயே சொன்னேன். அது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால், திரைக்கதை வெற்றிபெற்றது.
குஷி படத்தின் வெற்றிக்கு தேவா இசை காரணம், கட்டிப்பிடி கட்டிபிடி பாடலின் டியூனை செந்தமிழ் தேன்மொழியாய் என்ற பாடலில் இருந்து எடுத்தோம். அந்த பாடலை வேகமாக பாடினால் இந்த பாடல் டியூன் வரும். அதேபோல், மற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. 25 ஆண்டுகளுக்கு பின் நான் ரசிகனாக இப்போது படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுகிறேன். விஜய் டான்சும் பாடலை பிரபலமாக்கியது.
ஜோதிகாவுக்கு படத்தில் இளையநிலா என்ற பட்டம் கொடுத்தேன். புதிதாக அறிமுகம் ஆகும் அவருக்கு அது செட்டானது. அந்த படத்தின் வெற்றிக்காக உதவி செய்த ஒளிப்பதிவாளர் ஜீவாவுக்கு நன்றி. நான் நடிக்க வந்தேன். ஆனால், இயக்குனர் ஆகிவிட்டேன். இப்போது தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறேன். இப்போது கில்லர் என்ற படத்தை இயக்கி வருகிறேன். அந்த படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறேன். குஷி படம் தெலுங்கிலும் பவன்கல்யாண், பூமிகா நடிக்க ரீமேக் ஆனது. இன்றும் அந்த படத்தால் எனக்கு தெலுங்கில் நல்ல பெயர், இந்தியிலும் உருவானது.
குஷி படத்தின் இடுப்பு காட்சி பற்றி பலரும் கேட்கிறார்கள். அந்த கால காதல் படங்களில் அரசியல், ஜாதி, மதம், ஏற்றத்தாழ்வு, குடும்பபகை ஆகியவை வில்லத்தனமாக சித்தரிக்கப்பட்டன. நாம் புதுசா சிந்திப்போம்னு நினைத்தேன். காதலுக்கு காதலர்களே, அவர்களின் ஈகோவே எதிரி என்று கதை உருவாக்கினேன்.
அப்போது அந்த இடுப்பு சீன் வந்தது. நான் பார்க்க கூடாது. நீ என் கேர்ள் பிரண்ட் என்று ஹீரோ கேட்டு, ஹீரோயின் அதை ஓகே சொல்லிவிட்டால் படம் முடிந்துவிடும். ஆனால், அந்த இடுப்பு ஈகோ பிரச்னையை திரைக்கதையில் பெரிதாக்கினேன். படமும் பேசப்பட்டது. எரிக் சீகல் என்ற எழுத்தாளர் ரைட்டிங் எனக்கு பிடிக்கும். அந்த பாணியில்தான் அந்த சீனை எடுத்தோம். நான் நடிப்பில் பிஸியாக இருக்கிறேன், திருமணம் குறித்து யோசிக்கவில்லை. நான் சுதந்திர பறவையாக இருக்கிறேன்.
குஷி 2 எடுக்க வேண்டும் என்கிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். இப்போது விஜய் நடிப்பில் இருந்து விலகுகிறார். ஆனால், அவர் மகன் சஞ்சய் அழகாக இருக்கிறார். ஜோதிகா மகளும் வளர்ந்துவிட்டார். அவர்கள் இருவரையும் வைத்து குஷி 2 உருவாகுமா என்று தெரியவில்லை. சில அதிசயங்களை உருவாக்க முடியாது. அதுவாக நடக்க வேண்டும். இறைவன் அமைத்து கொடுத்தால் எல்லாம் நடக்கும். அடுத்த காதலர் தினத்துக்கு எனது நியூ படத்தை ரீ ரிலீஸ் செய்யப்போகிறேன் என்றார்.
சிறப்பு செய்தியாளர்: மீனாட்சிசுந்தரம்