"பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்" - இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் வீரியமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் எல்லை பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களை முறியடித்த வீடியோவை இந்திய ராணுவம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அந்த பதிவில்,
"வடக்கு நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்தே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகின்றது. எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த மீறல்களில் ஈடுபட்டது. இந்திய ராணுவம் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. பாகிஸ்தானின் அனைத்து தாக்குதல்களுக்கும் பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளது.