வீட்டிற்கு வெளியே நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்ட மனைவி தற்கொலை - கணவருக்கு ஜாமின்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் 32 வயதான விவசாயி மற்றும் மணல் ஒப்பந்ததாரர் சந்தோஷ் சுதாகர் ஷிலிம்கர். இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இச்சூழலில் சந்தோஷ் சுதாகர் தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். குறிப்பாக தனது இரு மகள்களில் ஒருவருக்கு மருத்துவ பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியிருந்தது.
இதனாலும் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 16, 2012 அன்று சுதாகர் ஷிலிம்கர் பன்றி இறைச்சியைக் எடுத்து வந்து தனது நண்பர்களுக்கு சமைக்குமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. சண்டையை தொடர்ந்து தனது மனைவி மற்றும் இளைய மகளை இரவு முழுவதும் நிர்வாணமாக வீட்டிற்கு வெளியே நிற்கும்படி ஷிலிம்கர் வற்புறுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்தப் பெண் அழுதுகொண்டே இந்த சம்பவத்தை தனது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுதாகர் மனைவி, மறுநாள் வீட்டிற்கு அருகில் இருந்த கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷிலிம்கரை கைது செய்து விசாரணை நடத்தினர். வழக்கு விசாரணையின் போது, ஷிலிம்கர் குற்றவாளி எனக் கண்டறிந்த செஷன்ஸ் நீதிமன்றம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஷிலிம்கர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவரது வழக்கறிஞர் சத்யவ்ரத் ஜோஷி, “துன்புறுத்தப்பட்டதற்கான நேரடி ஆதாரமும், தற்கொலைக்கு தூண்டும் நோக்கமும் தனது தரப்பினருக்கு இல்லை” என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அரசு வழக்கறிஞர் மனிஷா டிட்கே குற்றத்தின் தீவிரத்தை எடுத்துக் கூறியுள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.என்.லத்தா குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லை எனக்கூறி ஷிலிம்கருக்கு ஜாமீன் வழங்கினார். நிபந்தனைகளுடன் ரூ.25000 ஜாமின் பத்திரத்தில் ஷிலிம்கரின் கையெழுத்து பெறப்பட்டு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.