புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு: தமிழ்நாட்டில் நவ.14 முதல் பரவலாக மழை பெய்யும்!
வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது:
"தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழ்நாட்டில் வரும் 14-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களிலும், 14, 15, 16-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.