சென்னை கடற்கரை-எழும்பூர் 4-வது வழித்தடப் பணியில் தாமதம் - காரணம் என்ன?
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-ஆம் வழித்தடப் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடற்படை அனுமதிக்காக காத்திருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 3 ரயில் வழித்தடம் உள்ளதால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் சென்னை கடற்கரை-எழும்பூர் இடையேயான 4.30 கி.மீ தொலைவுக்கு ரூ.270.20 கோடி செலவில் 4-ஆவது வழித்தடம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆக.27-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதனால் கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையேயான பறக்கும் ரயில் சேவை கடந்த ஆண்டு ஆக.2-ஆம் தேதியுடன் ரத்து செய்யப்பட்டது.
துறைமுகம் அருகே கடற்படைக்கு சொந்தமான 110 மீட்டர் இடத்தை ரயில்வே நிர்வாகம் வாங்கிவிட்டு, அதற்கு ஈடாக வேறு அதே அளவு நிலத்தை வேறுபகுதியில் இருந்து கடற்படைக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இருதரப்பும் நிலத்தை ஒப்படைத்துவிட்டனர். ஆனால் கடற்படை தந்த இடத்தில் ரயில்வே நிர்வாகம் தண்டவாளம் அமைக்கும் பணியை மேற்கொள்ள கடற்படை இன்னமும் ஒப்புதல் வழங்கவில்லை.
இதனால் திட்டப்பணி தாமதமாகிறது. பிரச்னைக்கு தீர்வு காண ரயில்வே அமைச்சகம், கடற்படை தலைமையகத்திடம் பேசி வருகிறது. கடற்படை அனுமதி தந்தால் ஒரு மாதத்துக்குள் பணிகள் நிறைவுற்று சிந்தாதிரிப்பேட்டை- கடற்கரை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.