“இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது அதிகரித்திருப்பது ஏன்?” - நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி கேள்வி!
*இந்தியாவில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறுவது அதிகரித்திருப்பது ஏன்? என்று கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
”வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவுக்குள் வரும் எண்ணிக்கையை விட இந்தியாவில் இருந்து வெளியேறும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதுகுறித்து அரசின் பதில் என்ன?” என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி எம்பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதில், ”2018 ஆம் ஆண்டு 102 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டன. ஆனால் அதே வருடத்தில் 111 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டன.
இதே போல 2022 ஆம் ஆண்டில் 64 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை நம் நாட்டில் துவக்கின. அதே ஆண்டில் 78 வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்தின. 2018 இல் இருந்து 2023 மார்ச் வரையிலான சுமார் ஐந்தாண்டுகளில் இந்தியாவில் 469 வெளிநாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இதே காலகட்டத்தில் 559 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி இந்தியாவில் இருந்து புறப்பட்டுவிட்டன.
கோவிட் தொற்றுக்குப் பிறகு பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுக்கு செல்ல தயங்குகிற நிலையில் கூட... நாம் அவர்களுக்கு ஏற்ற வணிகச் சூழலை அமைத்துத் தரவில்லையா? இந்த தீவிரமான பிரச்சினையை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கக் கூடிய நடவடிக்கைகள் என்ன? ” என்று திமுக மக்களவை குழுத் துணைத் தலைவரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி மற்றும் ரஞ்சித் ரெட்டி ஆகிய உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக மக்களவையில் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
“வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது கிளை அலுவலகத்தையோ, திட்ட அலுவலகத்தையோ, தொடர்பு அலுவலகத்தையோ, அல்லது தங்களின் பிரநிதிகள் அலுவலகத்தையோ தொடங்கலாம். இதற்கு ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் அரசின் பிற துறைகளின் விதிமுறைகளை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்ட 30 நாட்களுக்குள் அந்த நிறுவனங்கள் கம்பெனி பதிவாளரிடம் (டெல்லி, ஹரியானா) கம்பெனிகள் சட்டம் 2013 -பிரிவு 380 இன் கீழ் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும்.
நீங்கள் தெரிவித்துள்ள மேற்கண்ட புள்ளி விவரங்கள் கம்பெனிகள் சட்டம் 2013 இன்படி 2018 இல் இருந்து 2023 மார்ச் வரையிலானது. இருப்பினும், வெளிநாட்டு நிறுவனங்கள் இது போன்ற தங்களது அலுவலகங்களை திறப்பதன் மூலம் மட்டுமல்ல... இந்திய துணை நிறுவனங்கள் மூலமாகவும் இந்தியாவில் வணிகம் செய்யலாம். அந்த வகையில் 2018-19 நிதியாண்டு முதல், 2022-23 நவம்பர் வரை 7,946 வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் இந்திய துணை நிறுவனங்களை பதிவு செய்திருக்கின்றன. Department for Promotion of Industry and Internal Trade (DPIIT) இன் இணைய தள புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.
2018-19-ம் நிதியாண்டில் 62,001 மில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2022-23-ம் நிதியாண்டில் 71,355 மில்லியன் டாலர்களாக அன்னிய நேரடி முதலீடு உயர்ந்திருக்கிறது. இந்திய துணை நிறுவனங்கள் மூலமோ அல்லது தங்களது திட்ட, தொடர்பு அலுவலகங்கள் மூலமோ இந்தியாவில் வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே தங்கள் வணிகத்தை தொடர்வதற்கும், மூடுவதற்கும் பல காரணிகள் இருக்கின்றன.
துறைசார் மூலதனம், செயல்பாடுகளின் நம்பகத் தன்மை, உலகளாவிய முன்னுரிமைகள், சந்தை அளவு, வெவ்வேறு புவியியல் சூழலில் செயல்படலாமா வேண்டாமா என்பது உள்ளிட்ட பல காரணிகள் அவற்றை நிர்ணயிக்கின்றன.
எனினும் அன்னிய நேரடி முதலீட்டின் அதிகரிப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நம் நாட்டில் நிலவும் வணிக சூழல் மீதான நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது” என்று எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.