டிஜிபி நியமனத்தில் ஏன் குளறுபடி? ஏன் இத்தனை பாரபட்சம்? எடப்பாடி பழனிசாமி!
கோவை விமான நிலையத்தில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "ஒரு வாரத்திற்கு முன் கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது கொடுமையான செயல். க்கள் நடமாடும் இடங்களில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அரசு, காவல் துறை மீது பயம் இல்லாமல் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது.
போக்சோ வழக்கில் ரூ.104 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுவது வேதனை அளிக்கிறது. காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் காவல்துறை ஒன்று இருக்கிறதா? அவ்வாறு இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு தருகிறதா என்ற சந்தேகம் தான் எழுகிறது.
டிஜிபி நியமன விவகாரத்தில் உரிய வழிமுறைகளை திமுக அரசு பின்பற்றவில்லை. தமிழகத்தில் நிரந்த டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. டிஜிபி நியமனத்தில் ஏன் குளறுபடி? ஏன் அரசு இத்தனை பாரபட்சம் காட்டுகிறது?
வாக்காளர் சிறப்பு திருத்தம் இதற்கு முன்பு 8 முறை நடந்துள்ளது. முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவித்து தகுதியானவர்கள் இடம்பெற வேண்டும் என்பதே எஸ்.ஐ.ஆர். திமுகவும், கூட்டணிக்கட்சிகளும் எஸ்.ஐ.ஆர்-யை எதிர்க்கும் நோக்கம் திருட்டு வாக்குகளுக்காகத்தான். வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை மக்களுக்கு கூற ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். எஸ்.ஐ.ஆர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். திமுக தவறான தகவல்களை தெரிவிப்பதாலேயே எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் வழக்கு போட்டுள்ளோம்.
இதற்குமுன் கட்சியில் இருந்து விலகியவர்கள் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை என் மீது வைத்தார்களா? என் மீது வேறு குற்றச்சாட்டு வைக்க முடியாததால் குடும்ப அரசியல் எனக்கூறுகிறார் செங்கோட்டையன். அதிமுக ஆட்சியை திமுகவால் குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை விமர்சிக்கின்றனர். எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.