சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் ஏன் தயங்குகிறார்? பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் தயங்குகிறார்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மீது சில கேள்விகளை முன் வைக்கிறேன். மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தால் மட்டுமே வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பீர்கள் என்பது எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் எந்த அடிப்படையில் 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை உருவாக்கினார்? எந்த சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அருந்ததியருக்கும் இஸ்லாமியருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது?
தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என மீண்டும் மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார்.
சட்டநாதன் ஆணையத்தை 1969-ல் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நியமனம் செய்யார். சட்டநாதன் ஆணையத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது. அதனை குப்பையில் தூக்கி வீசி விட்டார்கள்.
வன்னிய சமுதாயத்தையும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தையும் முன்னேற்றாமல் தமிழ்நாடு முன்னேறாது. போக்குவரத்து துறைக்கு கணக்கெடுப்பு, மகளிர் உரிமைத்தொகைக்கு கணக்கெடுப்பு, தெருல இருக்க நாய்களுக்கும், மாடுகளுக்கும் கணக்கெடுப்பு நடத்தும் போது ஏன் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் தயங்குகிறீர்கள்?
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.