தமிழ்நாட்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? சாட்ஜிபிடியின் பதிலை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா!
தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன் சிறந்தது என்ற கேள்விக்கு சாட்ஜிபிடி அளித்த பதிலை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஜன.7, 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பங்கேற்றார்.
இதில் பேசிய அவர் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன் சிறந்தது? என்ற கேள்வியை சாட் ஜிபிடியிடம் எழுப்பினேன். அதற்கு அது வியக்கத்தக்க பதிலை அளித்தது. தமிழ்நாட்டில் வலுவான உள்கட்டமைப்பு, மேம்பட்ட துறைமுகங்கள், திறமைமிக்க ஊழியர்கள், சிறந்த கல்விமுறை மற்றும் அரசு ஆதரவு உள்ளிட்ட காரணங்களை சாட்ஜிபிடி குறிப்பிட்டது.
இதையும் படியுங்கள்: திருநெல்வேலியில் குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கம்!
இங்கே மேடையில் பேசுவதற்கு சாட்ஜிபிடியால் தயார் செய்யப்பட்ட உரையை நான் பெற்றிருக்க முடியும். ஆனால் நான் செய்யறிவு இயந்திரங்களை விட மனிதர்களின் அறிவு மற்றும் அனுபவத்தின் மீது அதிகம் நம்பிக்கை கொண்டவன். நீங்கள், உங்கள் சுய அனுபவத்தை நம்பினால், வேறுவகையான உரையை உங்களால் கொடுக்க முடியும்" என தெரிவித்தார்.