பிரதமர் மோடி தன்னை ஏன் ஓபிசி என அடையாளப்படுத்துகிறார்? ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு கேள்வி!!
நாட்டில் ஏழைகளை ஒரே சாதியாகக் கருதும் பிரதமர் மோடி தன்னை ஏன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக(ஓபிசி) என அடையாளப்படுத்துகிறார் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஸ்கரின் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 7, 17ல் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பஸ்தார் பிரிவில் உள்ள ஜக்தல்பூர் தொகுதியில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
இந்நிலையில், சத்தீஸ்கரின் ஜக்தல்பூரில் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பழங்குடியினரை ஆதிவாசி என்பதற்குப் பதிலாக வனவாசி என்று குறிப்பிடுவதன் மூலம் பாஜக பழங்குடியினரை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும் தனது கட்சி வனவாசி என்ற வார்த்தையை நாட்டிலிருந்து அகற்றும் என்றார். பாஜக தலைவர்கள் தங்கள் பேச்சுகளில் ஆதிவாசிகளுக்கு வனவாசி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸஸும் வனவாசி என்ற புதிய சொல்லை உருவாக்கியுள்ளனர். வனவாசி மற்றும் ஆதிவாசி சொற்களுக்கு இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக தலைவர் சிறுநீர் கழித்ததைப் படம்பிடித்து வைரலானது. இதுதான் பாஜகவின் மனநிலை. ஆதிவாசி என்பது புரட்சிகரமான சொல். ஆதிவாசிகள் நாட்டின் அசல் உரிமையாளர்கள் என்று பொருள். பாஜக இந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை, ஏனெனில் அவ்வாறு பயன்படுத்தினால், உங்கள் நிலம், நீர், காடுகளைத் திருப்பித் தர வேண்டும்.
வனவாசி என்ற வார்த்தை பழங்குடியினரை இழிவுபடுத்துவதாகவும், அதைக் காங்கிரஸ் ஏற்காது என்றும் அவர் கூறினார். நாட்டில் ஒரே ஜாதி இருந்தால் அவர் ஏன் தன்னை ஓபிசி என்று சொல்லிக் கொள்கிறார்? என்று பாஜக தலைமையிலான மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கியுள்ளார்.