இளைஞர் மரணம் ஏன்? கிண்டி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!
இளைஞர் விக்னேஷ் மரணம் தொடர்பாக கிண்டி மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (31) என்ற இளைஞர், கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் வயிற்று வலி காரணமாக, நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து, சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இன்று உயிரிழந்தார்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாதததே இளைஞர் உயிரிழப்புக்கு காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். ஏற்கனவே நேற்று முன்தினம் கிண்டி மருத்துவமனையில் நடந்த கத்திக்குத்து சம்பவ பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், இச்சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இறப்பிற்கான காரணம் குறித்து மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று, அங்கு சிகிச்சையை தொடர முடியாத நிலையிலேயே, நோய் தீவிரத்துடன் இங்கு கொண்டு வரப்பட்டார். விக்னேஷ் அழைத்துவரப்பட்ட அன்று அனைத்து உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் பணியில் இருந்தனர். குடல் நோய் வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு அவருக்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தார். இறந்த விக்னேஷுக்கு முறையான சிகிச்சைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டது” என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.