ஏன் பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்யவில்லை? | விளக்கம் அளித்த ஆளுநர்...
அமைச்சராக பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார். இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.
பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதன்பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பிய நிலையில், பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தனியாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்யவில்லை நிறுத்தி மட்டுமே வைத்துள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பொன்முடியை அமைச்சரவையில் இடம்பெற செய்வது அரசியலமைப்புக்கு எதிரானது. அதனால் தான் முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்கவில்லை.
என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.