இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார்? - கவுதம் கம்பீரின் மௌனத்தால் நீடிக்கும் குழப்பம்!
தலைமைப் பயிற்சியாளர் குறித்து இதுவரை கவுதம் கம்பீர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என பிசிசிஐ அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது.
எனவே, இந்திய கிரிக்கெட்டின் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13-ம் தேதி பிசிசிஐ அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு மே 27ம் தேதியும் முடிவடைந்தது.
இந்த நிலையில் பிசிசிஐ விதித்த காலக்கெடு நிறைவடைந்த நிலையில் அடுத்த பயிற்சியாளருக்கான வாய்ப்பு கவுதம் கம்பீருக்குத்தான் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்காக கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அவை உறுதி செய்யப்படவில்லை.
இந்திய தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பம் குறித்து பிசிசிஐ மற்றும் கம்பீர் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கம்பீர் தலைமைப் பயிற்சியாளாருக்கு விண்ணப்பித்தாரா எனவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அதே நேரத்தில் எந்த வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கைவில்லை என தெரிகிறது. மேலும் கொல்கத்தா அணியில் அடுத்த பத்து வருடத்திற்கு தொடர வேண்டும் என ஷாருக் கான் வலியுறுத்தியுள்ளதாகவும் அதனால் கம்பீர் மௌனம் காக்கிறாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.