“திருமணத்தில் ஓதும் சமஸ்கிருதம் யாருக்கு புரிகிறது, இருமொழியே போதும்” - அமைச்சர் பொன்முடி!
விழுப்புரம் மாவட்டம் திருவென்னை நல்லூரில் திமுக இளைஞர் அணி சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
அப்போது அமைச்சர் பொன்முடி பேசியதாவது “நமக்கு இரு மொழியே போதும். பிறகு ஏன் மற்றொரு மொழி. தேவை உள்ளவர்கள் பிற மொழிகளை படிக்கலாம். உலக மொழி ஆங்கிலம் இருக்கும்போது இந்தி எதற்கு. திருமணத்தில் சமஸ்கிருதத்தில் ஓதுகிறார்கள் அது யாருக்கு புரிகிறது? இரு மொழியை கற்பிப்பதால் தான் மத்திய அரசு நிதிகொடுக்க மறுக்கிறது.
கல்வி வளர இரு மொழி கொள்கையே போதும். இந்தி கட்டாயம் என தினிப்பதைதான் எதிர்க்கிறோம். தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறைவாக உள்ளது காரணம், குடும்ப கட்டுப்பாடு. இந்தி பேசுபவர்கள் அதிகமாக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகை அடிப்படையில் பிரித்தால் எட்டு தொகுதிகள் குறையும். ஆனால் உள்துறை அமித்ஷா தொகுதிகள் குறையாது என கூறுகிறார். சதவீதம் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை உயர்த்தலாம். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்தக்கூடாது.
எல்லா மாநிலத்திற்கும் ஒரே விகிதத்தில் உயர்த்த வேண்டும். இரு மொழி கொள்கை நிலைத்திருக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேச நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் கூறியுள்ளார்”
இவ்வாறு வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.