"வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 39 லட்சம் பேர் யார்?" - ராகுல் காந்தி கேள்வி
நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே ) எம்பி சஞ்சய் ராவத், தேசிய மாநாட்டுக் கட்சி - சரத் பவார் பிரிவு எம்.பி சுப்ரியா சுலே உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்களுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது,
”மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி வருகிறோம். வாக்காளர்கள் மற்றும் வாக்குப் பட்டியல் தொடர்பாக எங்கள் குழுக்கள் ஆய்வு நடத்தியதை அடுத்து பல முரண்பாடுகளை கண்டறிந்துள்ளோம். 2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரத்தில் புதிதாக 32 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், 2024 மக்களவைத் தேர்தலுக்கும் 2024 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாதங்களில் மட்டும் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், புதிதாக சேர்க்கப்பட்ட 39 லட்சம் வாக்காளர்கள் யார்? இந்த எண்ணிக்கையானது ஹிமாசல் பிரதேசத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு சமம்.
மகாராஷ்டிராவில் வாக்கு செலுத்தும் வயதுடைய மொத்த மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. திடீரென வாக்காளர்கள் உருவானது எப்படி? வாக்காளர் பட்டியலை எங்களுக்கு வழங்க தேர்தல் ஆணையம் தயாராக இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏதோ தவறு இருக்கிறது, அது அவர்களுக்குத் தெரியும் என்பதே அதற்கு ஒரே காரணம்”
இவ்வாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.