மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் சாலைகள்!
மும்பையில் தொடரும் கனமழையால் சாலை முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் நிலையில், அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று (10.06.2024) இரவு மும்பையில் பலத்த மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். மேலும், மும்பையில் நேற்று பெய்த பலத்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலையில் தேங்கியிருக்கும் மழைநீரின் புகைபடங்கள் மற்றும் வீடியோவை சமூக ஊடக பயனர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தனர். அந்த புகைபடங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இன்று ரத்னகிரி, ராய்காட், பீட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : தென்மாவட்ட கடற்கரைகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மத்திய அரபிக் கடல், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் மற்றும் தெலங்கானாவில் தீவிரமடைவதற்கு சாதகமான சூழ்நிலை இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆண்டு பருவமழை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.