இந்த வாரம் வெளியான படங்களில் எது பெஸ்ட்… எந்த படம் பார்க்கலாம்?
இந்த வாரம் ஆரோமலே, அதர்ஸ், வட்டக்கானல், கிறிஸ்டினா கதிர்வேலன், பரிசு மற்றும் பகல்கனவு, தந்ந்தரா, அனல்மழை ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படமும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படங்கள் குறித்த மினி ரிவியூ ..
ஆரோமலே :
கிஷன்தாஸ், ஷிவாத்மிகா நடித்த காதல் கதை திரைப்படம் ஆரோமலே. நடிகர் தியாகு மகன் சாரங் தியாகு இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஆகியிருக்கிறார். வி.டி.வி.கணேஷ், துளசி, ராஜாராணி பாண்டியன், ஹர்ஷத்கான் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்கூல், காலேஜ், வொர்க் பண்ணும் கம்பெனி ஆகிய 3 இடங்களில் வரும் ஹீரோவின் காதலை கதை பேசுகிறது. முதல் இரண்டு காதலும் பெயிலியர் ஆக, மேட்ரிமோனியல் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது, அங்கு தனது மேனேஜராக இருக்கும் ஷிவாத்மிகாவை காதலிக்கிறார் ஹீரோ கிஷன்தாஸ். அந்த காதலிலும் பிரச்னை வந்து, ஹீரோயின் திடீரென காணாமல் போகிறார். அவர் எங்கு சென்றார். கடைசியில் காதலர்கள் சேர்ந்தார்களா என்பது கிளைமாக்ஸ்.
இன்றைய யூத் ரசிக்கும் வகையில் ஆரம்பம் முதல் கடைசிவரை யூத்புல், கலர்புல் விஷயங்களை சொல்லியிருப்பது படத்தின் பிளஸ். ஸ்கூல் பையன், காலேஜ் ஸ்டூடன்ட், பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞன் என 3 பரிணாமங்களில் சிறப்பாக நடித்து இருக்கிறார் கிஷன்தாஸ். அதிலும் அந்த ஸ்கூல் போர்ஷன் சூப்பர். ஷிவாத்மிகாவுடன் மோதல், சவால், காதல் காட்சிகள், அவரை பிரிந்து தவிக்கிற காட்சிகள் அழகு. அதேபோல் அவ்வளவு அழகாக, அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஷிவாத்மிகா. ஹீரோ ப்ரண்ட் ஆக வரும் ஹர்ஷத்கான் நடிப்பு, டயலாக்கால் படத்தை கலகலப்பாக்குகிறார். சித்துவின் இசை, பாடல்கள் ஆரோமலேவை இன்னும் அழகாக்கி இருக்கிறது.
அதர்ஸ்:
அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்ய மாதவன், கவுரிகிஷன், அஞ்சனா குரியன், முனிஸ்காந்த் நடித்த மெடிக்கல் திரில்லர் படம் அதர்ஸ். ஒரு விபத்து குறித்து இன்வெஸ்டிவ் செய்கிறார் போலீஸ் ஆபீசரான ஹீரோ ஆதித்ய மாதவன். அதில் பல திடுக் தகவல்கள் கிடைக்கின்றன. மெடிக்கல் ரீதியாக அதிர வைக்கும் விஷயங்களை வேதா என்பவன் செய்கிறான் என அவருக்கு தெரியவருகிறது. அதேசமயம், போலீசுக்கு நெருக்கமாக இருந்து தனது திட்டங்களை பக்காவாக நிறைவேற்றுகிறான் வேதா. அவன் யார்? பின்னணி என்ன? டாக்டரான ஹீரோயின் கவுரிகிஷன் எதை கண்டுபிடிக்கிறார். அவருக்கு என்ன ஆகிறது.
சமூகத்தில் திருநங்கைகள், திருநம்பிகள் அதிகரிக்க வேண்டும் என நினைத்து, மருத்துவ ரீதியாக வில்லன் செய்யும் அதிர்ச்சி விஷயங்கள் என்ன? கடைசியில் ஹீரோ பிடியில் சிக்கினானா என்பது கதை. இதுவரை தமிழில் சொல்லப்படாத மெடிக்கல் கிரைம் சப்ஜெக்ட். புதுமுக ஹீரோ போலீசாக ஓரளவு நன்றாக நடித்துள்ளார். டாக்டராக வரும் கவுரியும் பக்கா பொருத்தம். வில்லனாக மலையாள நடிகர் மூர் இடைவேளைக்குபின் தனித்துவ நடிப்பால் மிரட்டியிருக்கிறார். அவரின் பின்னணி, சோகம், வலி, கோபம்தான் படத்தின் பிளஸ்.
போலீஸ் அருகி்ல் இருந்து கொண்டே அவர் ஆடுகிற கேம் சூப்பர். இன்னொரு வில்லனாக வரும் நண்டு ஜெகனும் ரசிக்க வைக்கிறார். கிளைமாக்சில் ஆண், பெண் தவிர, அதர்ஸ் என்ற இன்னொரு இனம் இருக்கிறது. அவர்களை புறக்கணிக்ககூடாது. கிண்டல் செய்யக்கூடாது என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதற்பாதி கதையை விட, பிற்பாதி வேகமாக இருக்கிறது. கிரைம் திரில்லர்களுக்கு அதர்ஸ் பிடிக்கும்.
வட்டக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் இருக்கும் வட்டக்கானல் பகுதியில் இருக்கும் போதைக்காளன், அதை சுற்றி நடக்கும் கிரைம், பழிவாங்கல், துரோகத்தை சொல்லும் படம் இது. பித்தாக் புகழேந்தி இயக்கி இருக்கிறார். அப்பாவாக, வில்லத்தனமான பாத்திரத்தில் ஆர்.கே. சுரேஷ், அவர் மகனாக பாடகர் மனோ மகன் துருவன் வருகிறார்கள்.
மீனாட்சி கோவிந்தராஜன் ஹீரோயின். போதை காளானால் ஏற்படும் பிரச்னைகளை, அடிதடி, ரத்தம், துரோகம் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆர்.கே.சுரேஷ், மீனாட்சி நடிப்பு ஓகே. துருவன் சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். பாடகர் மனோவும் கவுரவ வேடத்தில் வந்து அசத்தி இருக்கிறார். சில திருப்பங்கள், பாடல்காட்சி, குறிப்பாக, கிளைமாக்ஸ் படத்துக்கு பலம். கமர்ஷியல் விஷயங்கள் இல்லாதது, வலுவான திரைக்கதை மிஸ் ஆவது படத்தின் மைனஸ்.
கிறிஸ்டினா கதிர்வேலன்:
கும்பகோணம் கல்லுாரியில் படிக்கும் ஹீரோயின் பிரதீபாவை காதலிக்கிறார் ஹீரோ கவுசிக்ராம். ப்ரண்ட்ஸ் திருமணத்துக்காக இவர்கள் போடும் சாட்சி கையெழுத்து இவர்களுக்கு பிரச்னை ஆகிறது. தவறுதலாக இவர்கள் திருமணம் செய்துவிட்டதாக வரும் சர்ட்டிபிகேட் பிரச்னைகளை உருவாக்குகிறது. அதிலிருந்து ஹீரோயின் மீண்டாரா? காதலர்கள் இணைந்தார்களா என்பது கிளைமாக்ஸ். இன்ஸ்டா பிரபலம் பிரதீபா நடிப்பு, ஹீரோவின் கிளைமாக்ஸ் நடிப்பு, ரகுநந்தன் இசை, கும்பகோணம் காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கிறது.
பாதராக வரும் சங்கர் நடிப்பும் ஓகே. ஆனால், பல இடங்களில் ஏமாற்றம். கிளைமாக்ஸ், அதற்கு முந்தைய ஒரு முக்கியமான காட்சிதான் படத்தை துாக்கி நிறுத்துகிறது. அதுவரை பொறுமையாக இருந்தால் படம் பிடிக்கும். காதல் கதையை புதுமையாக யோசித்து இருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ்பாண்டியன். புதுமுகங்கள் நடித்து இருப்பதாலும், மெதுவான திரைக்கதையாலும் படம் த டுமாறுகிறது.
பரிசு:
திரைப்பட கல்லுாரியில் படித்த கலா அல்லுாரி இயக்க, புதுமுகம் ஜான்விகா நடித்த ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம் பரிசு. பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவியான ஹீரோயின் ஜான்விகாவுக்கு ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற ஆசை. விவசாயம், துப்பாக்கிசுடும் போட்டியில் ஆர்வமாக இருப்பவர் எகிப்து கெய்ரோவில் நடக்கும் ஆசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதல் பரிசும் பெறுகிறாள்.
ஒரு விபத்து ஏற்படுத்தியவரை போலீசில் காட்டிக்கொடுக்க, அவரை வில்லன்கள் கடத்துகிறார்கள். என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ். தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் ஒரு மகளாகவும் , விவசாயியாகவும், ராணுவ வீரராகவும் சிறப்பாக நடித்து இருக்கிறார் ஜான்விகா.தந்தையாக முன்னாள் ராணுவ வீரராக வரும் ஆடுகளம் நரேன். பெண்களுக்குத் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கும் படம். சில குறைகள், கேள்விகள் இருந்தாலும் பெண்களை கொண்டாடும் கரு.
நாயகன் ரீ ரிலீஸ்:
பகல்கனவு, தந்தரா, அனல்மழை உள்ளிட்ட சின்ன பட்ஜெட்டில், புதுமுகங்கள் நடித்த படங்கள் வந்ததும் தெரியவி்ல்லை, ஓடுவதும் தெரியவில்லை. அதேசமயம், கமல்ஹாசன் 71வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது நாயகன். 38 ஆண்டுகளுக்கு பின் புத்தம்புது பொலிவுடன் வந்துள்ள நாயகனை கமல் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதை பார்க்காதவர்கள் கமல் நடிப்பை, இளையராஜா இசையை, மணிரத்னம் இயக்கத்தை வியந்து பார்க்கிறார்கள். குறிப்பாக, பாடல்காட்சிகள், ஆக்ஷன், நாயகன் அக்மார்க் வசனங்கள், கமலின் தனித்துவமான நடிப்பு, மும்பை பின்னணி கைதட்டல்களை அள்ளுகிறது.
சிறப்பு செய்தியாளர்: மீனாட்சிசுந்தரம்