காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வானது வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், வடக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதேபோல தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் வழியாக தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ஏப்.14ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கரூர், திருப்பூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.