அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வழங்கிய நிறுவனம்? அதானியோ, அம்பானியோ, டாடாவோ இல்லை!
அதிக தொகைக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கிய பட்டியலில் முதலிடம் பிடித்தது அதானியோ, அம்பானியோ, டாடா நிறுவனமோ இல்லை. இதில் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் என்கிற நிறுவனம் தான் முதலிடம் பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், பார்தி ஏர்டெல், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், வேதாந்தா லிமிடெட் ஆகியவை அதிகபட்சமாக பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களில் ஒன்றாக உள்ளன.
தேர்தல் பத்திரங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் தரவை நேற்று (மார்ச் 14) தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் இரண்டு முக்கிய நிறுவனங்களான அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் பெயரில் எந்த நன்கொடையும் வழங்கப்படவில்லை. இது எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றத்தை தந்தது. அதே நேரத்தில் எதிர்பாராத பல பெயர்கள், நன்கொடையாளர்கள் பட்டியலில் உச்சத்தில் இருந்தது.
நன்கொடையாளர்களின் முழு பட்டியலில், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், பார்தி ஏர்டெல், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், வேதாந்தா லிமிடெட், அப்பல்லோ டயர்ஸ், லட்சுமி மிட்டல், எடெல்வைஸ், பிவிஆர், கெவென்டர், சுலா ஒயின், வெல்ஸ்பன் மற்றும் சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் அதிக நன்கொடை வழங்கிய பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.
தேர்தல் பத்திரம் அதிக தொகைக்கு வாங்கிய நிறுவனங்களின் பட்டியல் இப்படி நீள, அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் வகிக்கிறது பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ். இந்த நிறுவனம் முன்பு மார்ட்டின் லாட்டரி ஏஜென்சிஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இது பிரபல லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனமாகும். லாட்டரி நிறுவனமான இது 2022 - இல் அமலாக்க இயக்குநரகத்தால் விசாரணைக்கு உட்பட்டது. இது இரண்டு வெவ்வேறு நிறுவனங்களின் கீழ் ரூ.1,350 கோடிக்கு மேல் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.