இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என கூறப்பட்டது. இதையடுத்து, வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக உள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்திருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.