நம்பர் பிளேட் எங்கே? கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் - சர்ச்சையில் சிக்கிய போலீஸ் ஜீப்!
சென்னை அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு முன்பாக நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்புரவுப் பணியாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசியதற்காக, C.P.L. (சென்னை மக்கள் சட்ட அமைப்பு) அமைப்பைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்களான நிலவுமொழி செந்தாமரை மற்றும் வளர்மதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில், அவர்களை அழைத்துச் சென்ற காவல் வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாதது சமூக ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
சமீபத்தில், துப்புரவுப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா சாலை பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது, அங்கு வந்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்ய முயன்றனர். இந்தச் சம்பவத்தை அறிந்த C.P.L. அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நிலவுமொழி செந்தாமரை மற்றும் வளர்மதி ஆகியோர் அங்கு சென்று, அராஜக முறையில் கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த போலீசார், இரு பெண் வழக்கறிஞர்களையும் கைது செய்து அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்தக் கைது நடவடிக்கையை அடுத்து, சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பரவி வருகிறது. அதில், பெண் வழக்கறிஞர்கள் இருவரும் அமர்ந்திருக்கும் காவல் ஜீப்பில், பின்புற நம்பர் பிளேட் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும், "அரசு வாகனத்திற்கு நம்பர் பிளேட் இல்லாமல் எப்படி இயங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொதுமக்களில் யாராவது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டினால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால், அதே விதி காவல்துறைக்கு ஏன் பொருந்தாது? நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, அரசு வாகனங்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யும்? ஒரு சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்துப் போராடியதற்காக, சட்டத்தை மீறிய ஒரு வாகனத்தில் அவர்களை அழைத்துச் சென்றது ஏன் என்று C.P.L. அமைப்பினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், காவல்துறை விதிகளுக்கும், பொதுமக்களுக்கான விதிகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் குறித்த விவாதங்களைதொடங்கியுள்ளது. இந்தச் சர்ச்சை குறித்து காவல்துறை தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.