“மழை நின்றதும் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்” -அமைச்சர் தங்கம் தென்னரசு
மழை நின்றதும் இரண்டு மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.
பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மழை நின்ற பிறகு 2 மணி நேரத்தில் படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும். சென்னையில் பல பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடியாக மின்சாரம் வழங்கினால் பாதிப்பு ஏற்படும்.
மின்விநியோக பாதிப்பை சரி செய்ய வெளி மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. உயர் அழுத்த மின் கோபுரங்களில் எந்த பாதிப்பும் இல்லை. மின்சார விநியோகத்துக்காக 5,527 பணியாளர்கள் தயார்நிலையில் உள்ளனர். 3,315 புகார்கள் பெறப்பட்டு 3,156 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.