Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வடகிழக்கு பருவமழை எப்போது? வடதமிழகத்திற்கு குட் நியூஸ் சொன்ன பாலச்சந்திரன்!

08:25 PM Oct 01, 2024 IST | Web Editor
Advertisement

தென்னிந்திய பகுதிகளுக்கு இந்தமுறை, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கத்தில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தென்மேற்கு பருவமழை

ஜூன் முதல் செப்.30 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 39 செமீ. இந்த காலத்தின் இயல்பு அளவு 33 செமீ. இது 18% இயல்பைவிட அதிகம். திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும், 6 மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பொழிந்துள்ளது.

கடந்தாண்டைவிட இந்தாண்டு தென்மேற்கு பருவமழை அதிகமாகவே இருந்தது. கடந்த ஆண்டு 8% இயல்பைவிட அதிகமாக பெய்தது. இந்தாண்டு 14% சதவீதம் இயல்பைவிட அதிகம்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரையில் கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா, ராயலசீமா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய உள்ளடங்கிய பகுதிகளில் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழைக்கு எல்நினோ, லாநினா நிகழ்வுகள் முக்கிய காரணிகளாக கருதப்படுகின்றன.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் லாநினா உருவாவதற்கு கிட்டதட்ட 80% வாய்ப்பு உள்ளது. 1940-ல் இருந்து 2021வரை 82 ஆண்டுகளில், கிட்டதட்ட 42 வருடங்கள் லா நினா வருடம். அவற்றில் 23 வருடங்கள் இயல்பாகவும், 13 வருடங்கள் இயல்பைவிட குறைவாகவும், 6 வருடங்கள் இயல்பைவிட அதிகமாகவும் மழைப்பொழிவு இருந்துள்ளது. மழைப்பொழிவு குறைவிற்கு லா நினாவை மட்டும் ஒரு காரணியாக கூறமுடியாது. 2010, 2021 வருடங்களும் லாநினா வருடங்கள்தான். ஆனால் அந்த இரண்டு ஆண்டுகளிலும் இயல்பைவிட அதிகமாக மழை பொழிந்தது.

2010ல் 43% இயல்பைவிட அதிகம், 2021-ல் 63% இயல்பைவிட அதிக மழைப்பொழிவு இருந்தது. ஆனால் 2016-ல் இயல்பைவிட 62% இயல்பைவிட குறைவாக மழைப் பொழிந்தது. அந்த வருடம் லா நினா வருடம்தான். இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளுக்கு இந்தமுறை வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிகழத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென்தமிழகத்தில் இயல்பைவிட குறைவாகவும் மழைபொழிய வாய்ப்புள்ளது. புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாக உள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழையின் துவக்கம் அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இருக்க வாய்ப்புள்ளது. அக்டோபர் நான்காவது வாரத்தில் மழை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இந்த மூன்று மாதங்களுக்கு மழை பொழிவானது இருக்கும்” என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags :
NorthEast MonsoonRainrain alertRegional Meteorological CentreSouthwest Monsoon
Advertisement
Next Article