சுப்ரியா சுலேவின் வாட்ஸ் ஆப் ஹேக்! நடந்தது என்ன?
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சுலேவின் வாட்ஸ்ஆப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, சில மணி நேரங்களில் சரியானது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகளும், அக்கட்சியின் எம்பியுமான சுப்ரியா சுலே தனது போன் மற்றும் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டதாகவும் போனில் தன்னை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்றும் நேற்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் கூறினார்.
இதனையடுத்து ஞாயிறுக்கிழமை காலை சுப்ரியா சுலே, புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அப்போது தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்ஆப்பில் அவருக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அதற்கு பதில் செய்தி அனுப்பியுள்ளார். அதன் பின்னரே அவரது வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் ஹேக் செய்த நபர் 400 டாலர் அனுப்ப வேண்டும் என்று கேட்டுள்ளார்.
சுப்ரியா சுலேவின் உதவியாளர் குழுவில் உள்ள ஒருவர், அவரது வாட்ஸ்ஆப் கணக்கை வைத்திருந்தபோது இவ்வாறு நடந்துள்ளது. உடனடியாக சுப்ரியா சுலேவிடம் இதுகுறித்து உதவியாளர் தெரிவிக்க, அவர் அருகில் உள்ள கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பட்டீலை ஒரு செய்தி அனுப்ப சொல்லியிருக்கிறார். அப்போது அவருக்கு பதில் வந்துள்ளது. ஆனால், சுப்ரியா சுலேவின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
சில மணி நேரங்களில் தனது போன் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் வாட்ஸ்ஆப் நிறுவனத்துக்கும் புனே காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து அன்று மாலையே எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதுகுறித்த அவரது பதிவில், 'மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருந்தும் எனது வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டது. நாம் அனைவரும் டிஜிட்டல் பாதுகாப்பில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் போது சரிபார்ப்பை(two factor verification) மேற்கொள்ளுங்கள். உங்கள் பாஸ்வேர்டு, ஓடிபியை யாருக்கும் கொடுக்க வேண்டாம். மேலும், தெரியாத எண்களின் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். டிஜிட்டல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதில் நாம் தகுந்த கவனம் செலுத்த வேண்டும். கவனமாக இருங்கள்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.