குளிர்கால கூட்டத்தொடரில் #DMK எம்.பி-க்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் என்னென்ன?
குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (நவ.28) நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், திமுக எம்.பி-க்கள் சில கேள்விகள் மற்றும் கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த சூழலில், குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் முன்வைத்த கேள்விகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பார்க்கலாம்.
கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் எப்போது வரும்? என்பது குறித்து திமுக எம்.பி. P. வில்சன் கேள்வி
மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. பி. வில்சன் கீழ்காணும் கேள்விகளை எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையம் மற்றும் கிளாம்பாக்கத்தை இணைக்கும் மெட்ரோ வழித்தடத்தின் தற்போதைய நிலை மற்றும் அவ்வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும் காலம் ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும். தொடர்ந்து தமிழ்நாடு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மட்டும் மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டின் விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புற மற்றும் கிராமப்புற) திட்டங்களுக்கு பிரதமரின் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நகர்ப்புறங்களில் மத்திய அரசு ஒரு வீட்டுமனைக்கு ரூ. 1,50,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 72,000 மட்டுமே வழங்குகிறது. ஆனால் மாநில அரசு நகர்ப்புறங்களில் ரூ.12,14,000 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.1,68,000 வழங்குகிறது. ஆகவே மத்திய அரசு தனது பங்கை அதிகரிக்க வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கையின் மீது மத்திய அரசு எடுத்துள்ள முடிவின் விவரங்களை தெரியப்படுத்த வேண்டும்.
விமானக் கட்டணம் தொடர்ந்து அதிகரிப்பது குறித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் குற்றச்சாட்டு
கடந்த ஆண்டில் விமானப் பயணச்சீட்டு விலை 40 சதவீதம் அதிகரித்து இருப்பது குறித்து மத்திய அரசிடம் திமுக எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக அதிக தேவை உள்ள காலங்களில், விமான கட்டணத்திற்கு மத்திய அரசு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விமான போக்குவரத்து நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடத்தவேண்டும் என்றும் தன்னிச்சையாக விலை நிர்ணயம் செய்வதை தடுக்க வெளிப்படைத்தன்மைமுறை அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் நியாயமான போட்டியை ஊக்குவிப்பதற்காகவும், விலையை குறைப்பதற்காகவும் பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நிலத்தடி நீர் மாசுக்கான தீர்வு என்ன? என்பது குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி
நாடு முழுவதும் நிலத்தடி நீரில் காணப்படும் ஆர்சனிக் மற்றும் ஃப்ளூரைடு மாசுபாட்டை தீவிர பிரச்னையாக எடுத்துக்கொண்டு மத்திய அரசு தீர்வுகாண நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மக்களவையில் திமுக நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். நிலத்தடி நீர் மாசுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிரந்தர தீர்வு காணும்வரை உடனடியாக மத்திய அரசு தூய்மையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் நிலை என்ன? என்பது குறித்து திமுக எம்.பி. அ. மணி கேள்வி
தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் நிலை, அவை முடிவடைய எதிர்பார்க்கப்படும் காலக்கெடு, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதி மற்றும் நடப்பு நிதியாண்டில் இதுவரை செலவிடப்பட்ட தொகை மற்றும் தமிழ்நாட்டின் சாலைப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கும் புதிய திட்டங்கள் குறித்த விவரஙக்ளை வெளியிடுமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் மக்களவையில் திமுக எம்.பி. அ. மணி கேள்வி எழுப்பினார்.
கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க செய்யுமாறு திமுக எம்.பி. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் வலியுறுத்தல்
நாட்டில் பெண்கள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் வலியுறுத்தி கேள்வி எழுப்பி உள்ளார். தற்காலிக பணியாளர்கள், தினசரி ஊதியம் பெறுவோர் உட்பட முறைசாரா துறை தொழிலாளர்களின் சமூக பாதுக்காப்பு திட்டங்களை உருவாக்கி அவற்றை சீரிய முறையில் நடைமுறைபடுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் கிராமப்புறங்களில் போதியளவு உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு மக்கள் வேலை நிமித்தமாக இடம்பெயர்வதை குறைக்கமுடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
செயல்பாட்டில் உள்ள அணுமின் திட்டங்கள் குறித்து திமுக எம்.பி, கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி
தற்போது நாட்டில் செயல்பாட்டில் உள்ள அணு மின் திட்டங்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிடவேண்டும் என்று அத்துறையில் அமைச்சரான பிரதமர் நரேந்திர மோடியிடம் திமுக எம்.பி. கனிமொழி என்.வி.என் சோமு கேள்வி எழுப்பினார். செயல்படும் திட்டங்களில் இருந்து செய்யப்படும் மின் உற்பத்தியின் அளவு அதற்கான செலவு மற்றும் கடந்த ஐந்தாண்டுகளில் அவை ஈட்டிய வருமானம் ஆகியவற்றை வெளியிடுமாறும் தனது அறிக்கையில் கோரியுள்ளார்.