"விஜய் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை" - #ADMK முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாதது குறித்து தவெக தலைவர் விஜய் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் ஆர்.ஜே தமிழ்மணியின் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது,
"மழை வெள்ளத்தை தமிழ்நாடு அரசு சரியாக கையாளவில்லை. தரம் இல்லாத நலத்திட்ட பொருட்களை மக்களுக்கு கொடுத்துள்ளது. எங்கு சென்றாலும் போட்டோ சூட் நடத்துகிறது. தமிழ்நாடு அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறது. சமீபத்தில் பெய்தது மிகவும் சாதாரண மழை தான். அதிமுக ஆட்சி காலத்தில் இதைவிட அதிகப்படியான கனமழை கொட்டி தீர்த்தது. 200 தொகுதிகளையும் வெல்வோம் என திமுக சொல்வது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை.
அரசு பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் என்று பல அரசு ஊழியர்களின் நம்பிக்கையையும் தமிழ்நாடு அரசு இழந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் சினிமா துறையில் இருந்து வந்து சினிமா செய்தியை நான் பார்ப்பதில்லை என்று பேசுகிறார். வேங்கைவயல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 67 பேர் உயிரிழந்தனர். இவற்றில் திமுக அரசு சரியாக செயல்படவில்லை. அதனால்தான் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது.
தவெக தலைவர் விஜய் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கூட்டணி கட்சிகளின் நெருக்கடி காரணமாகவே விசிக தலைவர் திருமாவளவன் விலகியிருக்கிறார். அவருக்கு யாரும் நெருக்கடி கொடுக்க முடியாது என்றாலும், மற்றவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக விலகியிருக்கிறார் என கருதுகிறேன்"
இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.