சுனிதா வில்லியம்ஸ் உடல் மாற்றத்துக்கு காரணம் என்ன?- விஞ்ஞானிகள் விளக்கம்!
சுனிதா வில்லியம்ஸ் மிக நீண்ட நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பதால் , அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஏவப்பட்ட போயிங் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி பயணங்களுக்கு வீரர்களை அழைத்துச் செல்வதை சோதனை செய்யும் வகையில், இரண்டு விண்வெளி வீரர்களான இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.
இவர்கள் இருவரது பயணமானது, சுமார் எட்டு நாட்கள் பயணம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், விண்கலத்தை உந்தி தள்ளும் அமைப்பில் உள்ள பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. இந்த சிக்கல்களால் ஸ்டார்லைனரின் விண்கலத்தில் பயணித்த மூத்த நாசா விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை உடனடியாக திரும்ப அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இவர்களது காலமானது 8 மாதங்களுக்கு மேலாக நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, சில வாரங்களுக்கு முன்பு ஸ்டார்லைனர் விண்கலமானது, விண்வெளி வீரர்கள் இல்லாமல் பூமி திரும்பியது. அந்த தருணத்தில் ஸ்டார்லைனர் விண்கலத்தின் சிக்கல்கள் முழுமையாக சரிசெய்யப்படாத காரணத்தால், விண்வெளி வீரர்களை அழைத்து வருவதில் நாசா மறுத்துவிட்டது.
இதையடுத்து, அவர்களை பூமிக்கு கொண்டு வர எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தை பயன்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது. SpaceX க்ரூ டிராகன் விண்கலம், கடந்த செப்டம்பரில் நான்கு விண்வெளி வீரர்களுக்குப் பதிலாக இரண்டு விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு அழைத்துச் சென்றது. இதன் மூலம், அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வில்மோர் மற்றும் வில்லியம்ஸுடன் பூமிக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , விண்வெளியில் நீண்டகாலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் மிக நீண்டகாலம் தங்கி இருப்பதால், அவர்களின் உடல்நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. சுனிதா வில்லியம்சின் தலை சற்று பெரிதாக ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் புவியீர்ப்பு விசை இருக்காது அல்லது மிகவும் குறைவாக இருக்கும். இதனால், உடலில் உள்ள நீர்ம மூலக்கூறுகள் சற்று , மேலே எழும்ப வாய்ப்பு இருக்கும். இதனால் நீர்ம மூலக்கூறுகள் தலைப்பகுதியில் சற்று அதிகம் செல்ல வாய்ப்பு ஏற்படும். இதனால், சுனிதா வில்லியம்ஸின் தலைப்பகுதி சற்று பெரிதாக இருக்கும்.
இது, விஞ்ஞானிகள் விண்வெளியில் இருப்பதால் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதனால் மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்றும் விஞ்ஞானிகள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும் , மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்கலத்தை பயன்படுத்தி பூமிக்கு உடனடியாக திரும்பி விடலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.