ராமனுக்கும், ராவணனுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?... வருண் தவானின் கேள்விக்கு பதிலளித்த அமித்ஷா!
தேசத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, நம் நாட்டின் ஹனுமான் என்று அழைக்க விரும்புவதாக பாலிவுட் நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.
‘ஆஜ் தக்’ ஹிந்தி சேனலில் அஜெண்டா ஆஜ் தக் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் வருண் தவானும் கலந்து கொண்டார். அப்போது வருண், “ராமருக்கும், ராவணனுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்ன?” என்று அமித் ஷாவிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமித் ஷா, “சிலர் தங்களது விருப்பங்களை, தங்களின் கடமைகளை கொண்டு தீர்மானிக்கிறார்கள். சிலர் தங்களது கடமைகளை, அவர்களின் சுய நலன்களை கொண்டு முடிவு செய்கிறார்கள். இதுதான் ராமனுக்கும், ராவணனுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.
ராமர் அவரது தர்மத்தின் அடிப்படையில் வாழ்க்கையை நடத்தினார் . அதே நேரத்தில் ராவணன் தனது சொந்த கொள்கைகள் மற்றும் எண்ணங்களுக்கு ஏற்றவாறு அவரின் கடமைகளை மாற்ற முயன்றார்” என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய வருண் தவான், “நீங்கள் ஆணவத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். ராவணன் தனது அறிவால் ஆணவம் கொண்டிருந்தான். அதே சமயம் ராமர் ஆணவத்தை பற்றி அறிந்திருந்தார்” என தெரிவித்தார்.
இதற்கு, "இதுவும் தர்மத்தின் வரையறைக்குள் தான் வருகிறது" என்று அமித் ஷா தெரிவித்தார். இதனையடுத்து அமித் ஷாவை பாராட்டிய வருண் தவான், “அரசியலில் மக்கள் அவரை சாணக்கியர் என்று அழைக்கிறார்கள். ஆனால் தேசத்திற்கு தன்னலமின்றி சேவை செய்யும் அவரை நம் நாட்டின் ஹனுமான் என்று நான் அழைக்க விரும்புகிறேன்” என தெரிவித்தார்.
மேலும், டயலாக்கை மனப்பாடம் செய்யும் நடிகர்களால் கூட இவ்வளவு தெளிவுடன் அவற்றை பேச்சை வழங்க முடியாது. அமித்ஷா, தனது இதயத்திலிருந்து முழுமையான தெளிவுடன் பேசுவதாக வருண் தவான் குறிப்பிட்டார்.