இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரம் இந்தியாவின் நிலைப்பாடு என்ன...?
தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல் , இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் தற்போதைய நிலைப்பாடு என்ன...? முடிவுக்கு வருமா உயிரிழப்புகள்.... விரிவாக பார்க்கலாம்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு-வை “மிஸ்டர் செக்யூரிட்டி” என்று அந்நாட்டினர் அழைக்கின்றனர். கால் நூற்றாண்டுக்கு மேல் இஸ்ரேல் அரசில், அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் அவர், 6-வது முறையாக ஆட்சியில் உள்ளார். அவர் முதல் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, ’’தன்னுடைய முக்கிய நோக்கமாக இருப்பது, இஸ்ரேலை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்றார். ஆனால், மிஸ்டர் செக்யூரிட்டி என்கிற அவரது பெயரை, கேள்விக்குள்ளாக்கியது கடந்த அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய திடீர் தாக்குதல் என்கிறார்கள்.
காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாலஸ்தீன அமைப்பான ஹமாஸ், அருகிலுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது நடத்திய தாக்குதலில் 1,400 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 240 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர் என்கிறார்கள். தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களில்., ’’நாங்கள் போரைத் தொடங்கி விட்டோம். உறுதியாக வெற்றி பெறுவோம் என்றார் நெதன்யாகு. சொன்னபடி, வான் வழித் தாக்குதலில் தொடங்கி, தற்போது, தரை வழித் தாக்குதலையும் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போதைய நிலையில், காஸாவில் உள்ள சுகாதார அமைச்சக, தகவல்படி, 4,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்கிறார்கள்.
காஸாவில் உள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாவும் தாக்குதல் இலக்கில் இருந்து தப்பவில்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) தகவலின்படி, இந்த மருத்துவமனை ‘கிட்டதட்ட ஒரு கல்லறை போல் ஆகிவிட்டது’’ என்கிறது. இந்த மருத்துவமனைக்கு கீழ், பூமிக்குள் சுரங்கப்பாதைகளை அமைத்து, கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளனர் ஹமாஸ் என்கிறது இஸ்ரேல். இதையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தொடர் தாக்குதலுக்கு உள்ளாகியது. ஆனால், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பும், அல்-ஷிஃபா மருத்துவமனை நிர்வாகவும் மறுத்துள்ளன.
காஸாவில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், கடந்த மாதம் 26ம் தேதி ஐ.நா பொதுச் சபையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை, மனிதாபிமான அடிப்படையில் உடனே நிறுத்த ஜோர்டான் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்துக்கு 120 நாடுகள் ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. இந்தியா, பிரிட்டன், கனடா, இராக், இத்தாலி, யுக்ரேன் உள்ளிட்ட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. காஸா-வில் மக்கள் கொல்லப்படுவது குறித்து இந்தியா கவலையடைந்துள்ளது. காஸாவிற்கு மனிதாபிமான, நிவாரண உதவிகளை இந்தியா அனுப்பியுள்ளதாகவும் ஐ.நாவிற்கான இந்திய தூதர் தெரிவித்தார். ஆனாலும், வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியாவின் நிலைப்பாடு விமர்சனத்திற்குள்ளானது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
மேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று குறிப்பிட்டது இந்தியா. ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்’ இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பதாகவும் சொன்னது. அடுத்த சில நாட்களில், ’’பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. பாலஸ்தீனர்களின் சுதந்திரமான மற்றும் தன்னாட்சி பெற்ற பாலஸ்தீன கோரிக்கையை இந்தியா ஆதரிக்கிறது. என்றது. இஸ்ரேல் உருவான 1948ல் இருந்தே, இந்தியாவின் நிலைப்பாடு பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, இஸ்ரேல் பிரிவினையை முதலில் எதிர்த்தார். பிரிவினைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. ஆனால், 1950ல் இஸ்ரேலை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்தது என்கிறார்கள்.
ஆனாலும், 1974ஆம் ஆண்டில், பாலஸ்தீன மக்களின் ஒரே மற்றும் சட்டப்பூர்வ பிரதிநிதியாக பாலஸ்தீன விடுதலை அமைப்பை அங்கீகரித்த, முதல் அரபு அல்லாத நாடு இந்தியா. ஐ.நா பொதுச் சபையின் 53வது அமர்வில், பாலஸ்தீனர்களின் சுய நிர்ணய உரிமைக்கான வரைவுத் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தது. இஸ்ரேலின் பிரிவினை சுவர் கட்டும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த 2011ல் யுனெஸ்கோவில் பாலஸ்தீனம் முழு உறுப்பினராக ஆதரவு. கடந்த 2015ல் ஐ.நா வளாகத்தில் பாலஸ்தீனக் கொடியை நிறுவ ஆதரவு. தொடர்ந்து 2018ல் பாலஸ்தீன பகுதிகளுக்கு சென்ற முதல் இந்திய பிரதமராக நரேந்திர மோடி... என பல்வேறு நட்புறவு நடவடிக்கைளையும் இந்தியா முன்னெடுத்துள்ளது.
இந்தியாவிற்கு இக்கட்டான நிலையா...?
இந்நிலையில், தற்போதைய இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் இந்தியாவுக்கு ஒரு இக்கட்டான நிலையை உருவாக்கியுள்ளது என்கிறார்கள் சர்வதேச ஆய்வாளர்காள். முக்கியமாக “இஸ்ரேலுடன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இந்தியா நெருக்கமாக உள்ளது. பாதுகாப்புத்துறைக்கான ஆயுதங்களை அந்நாட்டிடம் இருந்து இந்தியா வாங்கி வருகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட 'இந்தியா--மத்திய கிழக்கு--ஐரோப்பா வழித்தடத்தை' பாதிக்கும் வகையில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். இது போன்ற சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு மிக முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. .
இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில், ’’இந்தியா தனது பாரம்பரிய கொள்கையில் சமரசம் செய்து கொள்கிறது’’என்கிற விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால், ‘’இந்தியாவின் தற்போதைய ராஜ தந்திர நடவடிக்கைகளை, நாட்டு நலன்களைப் பாதுகாக்கும் முயற்சியாக’’ ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். ஆனாலும், இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்தால், இந்தியாவின் நிலைப்பாடும் மாறலாம். கொள்கையும் மாறலாம் என்கிறார்கள்.
காஸா மீதான் இஸ்ரேல் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், கிழக்கு ஜெருசலேம், கோலன் குன்றுகள் உள்ளிட்ட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களை அமைக்க கண்டனம் தெரிவித்து, ஐ.நா பொது அவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. கடந்த மாதம் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்த இந்தியா, தற்போது தீர்மானத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தி விட்டதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
இஸ்ரேலை ஆதரிக்கும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும், வலியுறுத்தும் போர் நிறுத்தம் எப்போது வரும்...? இந்தியா...ஐ.நா என்ன செய்யப் போகின்றன....?