நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் உள்ள மக்களவைக்குள் இருவர் நுழைந்து மஞ்சள் புகை உமிழும் குப்பியை வீசி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம்...
2001ம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி தீவிரவாத இயக்கங்களுள் ஒன்றான லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த போராளிக்குழுவான ஜெய்ஸ்-இ-முகமது இயக்கங்களைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில், தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு பெண், உதவி பாதுகாப்பு அலுவலர்கள் இருவர், டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 5 பேர், தோட்டக்காரர்கள் இருவர் மற்றும் பத்திரிக்கையாளர் ஒருவர் என மொத்தம் 9 பேர் உயிர் தியாகம் செய்தனர்.
இந்த தாக்குதல் நடைபெற்று 22 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான ஜெக்தீப் தன்கர் தலைமையில், அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாஜக தலைவர் ஜெ.பி நட்டா, காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடிந்து உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நிலையில், மக்களவையில் பூஜ்ஜிய நேரத்திற்கான விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வந்தது. அப்போது, மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்து மேஜை, பெஞ்சுகள் மீது ஏறி அங்குமிங்குமாக ஓடத் தொடங்கினர். இருவரும் தங்கள் காலணிக்குள் மறைத்து கொண்டு வந்த புகை உமிழும் குப்பிகளை வீசிய நிலையில், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதால் மக்களவைக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "சர்வாதிகாரம் ஒழிக" என கோஷமிட்டபடி அத்துமீறி நுழைந்த இருவரையும், மக்களவை உறுப்பினர்கள் சிலர் மடக்கிப் பிடித்து சரமாரியாகத் தாக்கி அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
அதே நேரத்தில், நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியேயும் பெண் உட்பட இருவர், அதே புகை உமிழும் குப்பிகளை கையில் ஏந்தியபடி சர்வாதிகாரம் ஒழிக என கோஷமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற வளாகமே பெரும் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில், அத்துமீறி மக்களவைக்குள் நுழைந்த 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 4 பேரையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். மக்களவையிலும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் வீசப்பட்ட புகை உமிழும் குப்பிகளால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில், அவை பதற்றத்தை உருவாக்க வீசப்பட்ட வண்ணப் புகை உமிழும் குப்பிகள் என விளக்கமளிக்கப்பட்டது.
டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தீவிரவாத தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், அவர்கள் என்ன காரணத்திற்காக இந்த அத்துமீறலில் ஈடுபட்டார்கள் என்ற விவரங்கள் முழுமையான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த நாட்டின் தலைமை பீடமாகவுள்ள நாடாளுமன்றத்தில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் மீறி ஒரு கும்பல் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.