“என்ன கொத்தமல்லி 100 கிராம் ரூ.140?” செப்டோவின் விலைப்பட்டியல் இணையத்தில் வைரல்!
ஆன்லைன் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செயலியான செப்டோவில் கொத்தமல்லி 100 கிராம் ரூ.140க்கு விற்பனை செய்வதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக காய்கறிகள் வாங்கும் போது காய்கறி வியாபாரி கொத்தமல்லி இலைகள் மற்றும் கருவேப்பிலை ஆகியவை இலவசமாக கேட்டால் கடைக்காரர் வழங்குவார். அதுவே அதிக அளவில் தேவை இருக்கும் போது ரூ.10 அல்லது 20க்கு தங்களுக்கு வேண்டிய அளவு மக்கள் வாங்கிக் கொள்வார்கள்.
ஆனால் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனமான செப்டோ (Zepto) 100 கிராம் கொத்தமல்லி இலைகளை ரூ.141க்கு விற்பனை செய்கிறது. இதனை குருகிராம் நகரை சேர்ந்த Harsh Upadhyay என்ற நபர் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார். Zepto செயலியின் விலைப்பட்டியலின் ஸ்கிரீன்ஷாட்டை அவர் பகிர்ந்துள்ளார்.
சிலர் இந்த விலையை உடனடியாக பிளிங்க்-இட் (Blink It) செயலியுடன் ஒப்பிட்டு பிளிங்க்-இட் செயலியில் ரூ.40 க்கு கொத்தமல்லி கிடைக்கிறது என்று பகிர்ந்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த எட்டெக் தொழிலதிபர் சௌரப் ஜெயின் என்பவர் பிளிங்கிட்டிலிருந்து கொத்தமல்லி தழையை சுமார் ரூ. 50-க்கு வாங்கியதாகக் கூறியுள்ளார். இதனையடுத்து, ரூ.10 ரூபாய்க்கு சந்தையில் எளிதாகக் கிடைக்கும் கொத்தமல்லி இலைகள், ஏன் ஷாப்பிங் ஆப்ஸில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது என்ற விவாதங்கள் எழுந்தன.
சில நாட்களுக்கு முன்பு, என் அம்மா என்னிடம் கொத்தமல்லி ஆர்டர் செய்யச் சொன்னார். Blinkit-இல் 100 கிராம் ரூ.30க்கு இருந்தது, ஆனால் மார்க்கெட் விலை ரூ.10. அதற்கு மேல் ரூ.30 டெலிவரி கட்டணம் மற்றும் பீக் ஹவர்ஸ் என்பதால் ரூ. 30 கூடுதல் கட்டணம், மேலும் ரூ. 5 ஹேண்ட்லிங் கட்டணம். எனவே, ரூ. 10 பொருளை ரூ. 95-க்கு விற்பனை செய்கிறார்கள் என்று பல் மருத்துவர் Vrijilesh Rai கூறியுள்ளார் .
Zepto நிறுவனம் 100 கிராம் கொத்தமல்லிக்கு ரூ.141 வரை விலை வைப்பது சரியில்லை என்று சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனென்றால், 2 ஆண்டுகளில் DMart நிறுவனத்தை விட பெரிய நிறுவனமாக மாற வேண்டும் என்ற இலக்கை Zepto கொண்டுள்ளது. விலையை குறைத்து, வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை கருத்தில் கொண்டால் Zepto நிறுவனம் தனது இலக்கை அடைய அதிக வாய்ப்பு இருக்கும் என்ற கருத்துக்கள் நிலவுகின்றன.