Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

உக்ரைனின் கோரிக்கைக்கு செவிமடுக்காத மேலை நாடுகள்... #VolodymyrZelenskyy செய்யப்போவது என்ன?

12:59 PM Sep 15, 2024 IST | Web Editor
Advertisement

ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளில் தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற உக்ரைனின் கோரிக்கையை அமெரிக்காவும், பிரிட்டனும் நிராகரித்துள்ளன.

Advertisement

மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பான நேட்டோவில், உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. இதில், உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும், பிற நேட்டோ உறுப்பு நாடுகளும் ஏவுகணைகள், பீரங்கிகள், போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுத தளவாடங்களை அளித்து உதவி வருகின்றன.

தனது எல்லையை தற்காத்துக்கொள்வது உக்ரைனின் அடிப்படை உரிமை எனவும், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதாகவும் மேற்கத்திய நாடுகள் கூறிவருகின்றன.

எனினும், உக்ரைன் எல்லைக்குள் உள்ள ரஷ்ய படையினருக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே உக்ரைனுக்கு மேலை நாடுகள் ஆயுதங்கள் வழங்குகின்றன. ரஷ்யா மீது தங்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டால், அது உலகின் மிகப் பெரிய அணு ஆயுத சக்தியான அந்த நாட்டுக்கும், தங்களுக்கும் இடையிலான நேரடி போராக உருவெடுக்கும் என்று நேட்டோ நாடுகள் கருதுவதாலேயே இந்த நிபந்தனை விதிக்கப்படுகிறது.

எனினும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், அந்த நாட்டிலுள்ள ராணுவ நிலைகள் மீது மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளைக் கொண்டு எல்லை கடந்து தாக்குதல் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று, மேலை நாடுகளை உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ரஷ்யா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த உக்ரைனை அனுமதிப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்காமலேயே ஜோ பைடன், கியெர் ஸ்டார்மர் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.

நேற்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஸ்டார்மெர் கூறியதாவது;

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. பல்வேறு விவகாரங்களில் ஒட்டுமொத்த செயல்திட்டத்தை உருவாக்குவதை மையப்படுத்தியே எங்கள் போச்சுவார்த்தை இருந்தது. குறிப்பிட்ட எந்த முடிவையும் எடுப்பதற்காக நாங்கள் பேசவில்லை” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில்,

“காசா, உக்ரைன் போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பைடனும், ஸ்டார்மரும், ரஷ்யாவுக்கு ஈரான், வடகொரியா ஆயுதங்களை வழங்குவது குறித்து கவலையை பரிமாறி கொண்டனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, தங்கள் நாட்டின் மீது ஈரானில் தயாரிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு ட்ரோன்களை ரஷியா கடந்த வெள்ளிக்கிழமை வீசியதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஜெலன்ஸ்கி கூறினார். இத்தகைய அச்சுறுத்தல்களில் இருந்து உக்ரைன் மக்களைப் பாதுகாக்க ரஷ்யாவின் நீண்ட தொலைவில் உள்ள ஏவுதளங்கள் மீது, தாக்குதல் நடத்துவதற்கு மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அது குறித்து ஜோ பைடன் கியெர் ஸ்டார்மர் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

Tags :
keir starmerRussian TerritoryUkraineUnited States
Advertisement
Next Article