வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி - அரையிறுதி வாய்ப்பை இழந்த அமெரிக்கா!
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜூன் 2ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியின் முதல் சுற்று முடிவடைந்தது. 20 அணிகள் பங்குபெற்ற இந்த உலகக்கோப்பை தொடரில் தற்போது 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் பார்படாஸில் உள்ள கேனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - அமெரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பவல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய அமெரிக்க அணி 128 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கவுஸ் 29 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ரசல் மற்றும் சேஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
பின்னர் களமிறங்கிய பூரனும் சிறப்பாக ஆட வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹோப் 82 ரன்கள் குவித்தார். நிகோலஸ் பூரண் 27 ரன்கள் அடித்தார். ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேஸ்ஸுக்கு வழங்கப்பட்டது. இந்த தோல்வியின் மூலம் அமெரிக்க அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்துள்ளது. இந்த அணி கடைசியாக நாளை நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.