தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி!
தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள் அணி.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் வருகிற ஜூன் 2ம் தேதி துவங்க உள்ளது. இதனையொட்டி அனைத்து நாடுகளும் தங்களது வீரர்கள் பட்டியலை வெளியிட்டு தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், 2-வது டி20 போட்டி ஜமைக்காவின் சபினா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் பிராண்டன் கிங் 36 ரன்களும், கைல் மேயர்ஸ் 32 ரன்களும், ரோஸ்டன் சேஸ் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது.
தென்னாப்பிரிக்கா தரப்பில் இங்கிடி, நாபா பீட்டர், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 34 ரன்களும், குவின்டன் டீ காக் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஸீ வான் 30 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் இழந்து 191 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் கைப்பற்றியுள்ளது. இதன் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது.